Tag: Vijayakanth
பிரேமலதா விஜயகாந்த்: தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும்..!
தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும், தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும் என்று தேமுதிக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
தேமுதிக தொடங்கி 19 ஆண்டுகள் நிறைவடைந்து 20-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழகத்தில் நிலவும் மணல் கொள்ளை, மீனவர்கள் பிரச்சினை, டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் அவலங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பாலியல் வன்கொடுமைகள், சுங்க கட்டண உயர்வு, அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள தண்ணீர் பிரச்சினை, விவசாயம் அழிந்து பாலைவனமாக காட்சியளிக்கும் டெல்டா பகுதிகள், அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத அவலம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு போன்ற எத்தனையோ பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றுக்கு தீர்வு காணவும், தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும், தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும். எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், அவதூறு வழக்குகள் வந்த போதும் பல சவால்களை சந்தித்து வீறு நடை போடுகிறது தேமுதிக.
நம் கட்சியினர் உண்மை விசுவாசத்தின் பிரதிபலிப்பாகவும், முன் எப்போதும் இருப்பதை காட்டிலும் பல மடங்கு ஒற்றுமையாகவும், உறுதியோடும் இருந்து வரப்போகும் தேர்தல்களை சந்தித்து தேமுதிக இன்று தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தி என்றும், தமிழகத்தில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் என்றும், நம் உழைப்பால் மேலும் உணர்த்துவோம்.
தேமுதிக தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு முக்கியமாக சாதி, மதம், இனம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சியாக தொடர்ந்து பாடுபட்டு வருவதே ஆகும்.
பல்வேறு வெற்றிகள், தோல்விகள், சவால்கள், எதிர்நீச்சல் போட்டு, துரோகங்கள் எல்லாவற்றையும் சந்தித்து நமது பாதையில் எத்தனையோ கற்களும், முற்களும் இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து 20 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த நாளில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே, தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற விஜயகாந்தின் தாரக மந்திரம் படி எட்டுத்திக்கும் நமது முரசு வெற்றி முரசாக கொட்ட அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம்.” என பிரேமலதா விஜயகாந்த் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
காற்றில் கலந்த கருப்பு நிலா.. சோகத்தில் மூழ்கிய தமிழகம்..!
கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்கரார் கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற யாரும் பசியோடு வெளியே வந்தது இல்லை என்றும் திரையுலகினர் புகழாரம் சூட்டும் நடிகரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். நாளை மாலை 4.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழகமெங்குமிருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
விஜயகாந்த் மறைவுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளது. திரை தொழிலாளர்கள், உதவி இயக்குநர்கள், நாளைய இயக்குநர்கள் நல்ல நிலையை அடையும்வரை அவர்களின் பசியை போக்கியவர். நாளை திரைப்படத் துறையில் அனைத்து பணிகளை நிறுத்தி வைப்பதாக பெப்சி அறிவித்துள்ளது.
‘விஜயகாந்த் என்பவர் நடிகர் அல்ல, அவர் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் காட்ஃபாதர்’. ஊமை விழிகள் படம் மூலம் எண்ணற்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை தந்த மகா கலைஞன். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் விஜயகாந்தை மனதார போற்றும் என்று தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி இரங்கல் தெரிவித்துள்ளது.
கள்ளழகர் படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்தது காலத்தால் அழியாத பரிசு என நடிகர் சோனு சூட்வும், சிறந்த பண்பாளர், பன்முகத் திறமை கொண்டவர், புத்திக்கூர்மையான அரசியல்வாதி விஜயகாந்த். நேரடியாக தெலுங்கு படங்களில் நடிக்காவிட்டாலும் தெலுங்கு ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டவர் விஜயகாந்த் மறைந்த செய்தியை அறிந்து இதயம் நொறுங்கிப் போனதாக நடிகர் சிரஞ்சீவி உருக்கமாக தெரிவித்துள்ளார். நமது அன்பான கேப்டன் நம்மிடம் வெகு சீக்கிரத்தில் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றுவிட்டார் என்று நடிகர் சிரஞ்சீவி வேதனை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், அரசியல் தலைவராக பொதுச்சேவையில் விஜயகாந்த் காட்டிய அர்ப்பணிப்பு வியக்க வைத்தது என கிரண் ரிஜிஜூ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். கட்சியின் பெயரில்கூட திராவிட உணர்வை பதித்தவர் விஜயகாந்த். வெள்ளை உள்ளம் கொண்டு கருப்பு வைரமாகவே வாழ்ந்தவர்; சிறந்த மனிதர் என்ற பெருமைக்குரியவர் விஜயகாந்த் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.