டெல்லியில் விவசாய அமைப்புகள் போராட்டம் 300 நாள் நிறைவு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றனர். இந்த விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்நிலையில் விவசாய அமைப்புகள் டெல்லியில் மேற்கொண்டுள்ள போராட்டம் நேற்றுடன் 300 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியாக நடத்தி வரும் அறப்போர் 300 நாள்களைக் கடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெளிவாகத் தெரிந்தாலும் மத்திய அரசு அவற்றை ஏற்க மறுகின்றனர், எனவே எங்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசம் காவல்துறை தலித் குடும்பங்களை தாக்கி நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்கு பதிவு

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரவுனாபரின் அசாம்கார் பாலியா கிராமத்தில் தலித் குடும்பங்களை உத்தரப் பிரதேசம் காவல்துறை தாக்கிய செய்தி உள்ளது. அங்கு பல வீடுகள் இடிக்கப்பட்டன, நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இது அரசு ஊழியர்களின் தலித் எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கையில் தான் இருக்கிறது

உத்தர பிரதேசத்தின் மதுராவில் ரவுடிகள் சிலர் 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததோடு அவளை 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டனர். ஆபத்தான நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ‘மக்கள் உயிர் பயத்தில் நடுங்குகிறார்கள், ஆனால் அரசாங்கம் உறங்குகிறது’. மதுராவில் ரவுடிகளின் அட்டகாசத்தால் சிறுமி உயிருக்கு போராடுகிறாள். காட்டாட்சியில், பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கையில் தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.