பயிர்க்கடன்களில் முறைகேடுகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகள் அதனை திரும்ப செலுத்தியும் உரிய ரசீது வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இதனால் விவசாயிகள் மேலும் பயிர்க்கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பயிர்க்கடன் விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும், விவசாயிகள் பிரச்சினைக்கு உரிய தீர்வுகாண கோரியும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த முறைகேடு தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடனை உடனடியாக திரும்ப வழங்ககோரியும், முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மற்றும் அவருடைய உதவியாளர் மீது மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்க கோரியும் கடந்த 14-ந் தேதி முதல் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் முறைகேடு தொடர்பாக குடிமங்கலம் காவல் நிலையத்தில் விருகல்பட்டிபுதூரைச் சேர்ந்த விவசாயி லோகசிகாமணி என்பவர் அளித்த புகாரின் பேரில், கூட்டுறவு சங்க செயலாளர் கீதா மற்றும் துணை செயலாளர் செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் நேற்று குடிமங்கலம் காவல்துறை போலீசார் கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

உலக சாதனைக்காக கும்மியாட்டம்

திருப்பூர் உலக சாதனைக்காக உடுமலைப்பேட்டையில் பவளக்கொடி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தின் நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றான கும்மியாட்டக்கலை தற்போது கோவில் திருவிழாக்கள், பாரம்பரிய ஆர்வலர்களால் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் மறுமலர்ச்சி பெற்று வருகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தந்து நோய் நொடி இல்லாத நீண்ட வாழ்வை அளிக்கக்கூடிய ஆடல் பாடலுடன் கூடிய பழமை வாய்ந்த இந்த கும்மியாட்ட கலை மேற்கு மண்டல மாவட்ட மக்களால் பரவலாக பாடப்பட்டு வந்த நிலையில் நாளடைவில் மெல்ல மெல்ல மக்களிடம் இருந்து மறையத்தொடங்கியது.

இந்நிலையில் அழிந்து வரும் கும்மியாட்டக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பவளக்கொடி கும்மியாட்ட கலை பயிற்சியை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர். உலக சாதனை நிகழ்வு அந்த வகையில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்ற நிகழ்வாக 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பவளக்கொடி கும்மியாட்டம் நேற்று இரவு உடுமலைப்பேட்டை அடுத்த மலையாண்டிகவுண்டனூர் கிராமத்தில் மின்னொளியில் நடைபெற்றது.

எஸ்.பி. பொன்ராமு ஆய்வு உலக சாதனை நிகழ்வு, 50-வது பொன்விழா அரங்கேற்றம், கும்மியாட்ட நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாக ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதை கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி நிறுவனர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து உலக சாதனை அதிகாரிகள் முன்னிலையில் கும்மியாட்டம் தொடங்கியது.

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உற்சாகத்தோடு கலந்துகொண்டு நாட்டுப்புறப்பாடல், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், திரைப்பட தத்துவ பாடல்களை பாடியவாறு நான்கு மணி நேரம் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் ஆட்டத்தை மெய்சிலிர்க்கும் வகையில் அரங்கேற்றினார்கள். இந்த ஆட்டத்தை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் பார்த்து ரசித்ததோடு தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டும் மகிழ்ந்தனர்.