நாங்கள் பிச்சை எடுக்கவில்லை.., பொருட்கள் விற்கிறோம்… கரோனாவால் அங்கன்வாடி திறக்காத சூழலில் அவர்களை வீட்டில் தனியாக விட்டு வர முடியவில்லை…!

கொளுத்தும் வெயிலில் மதுரை நகரில்  ரயில், பேருந்து நிலையங்கள், போக்குவரத்து சிக்னல், கோயில்கள், உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் குழந்தைகளை வைத்து பெற்றோர், உறவினர்கள் பிச்சை எடுக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதையடுத்து ஆட்சியர் உத்தரவின்பேரில் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக் குழுத் தலைவர், உறுப்பினர்கள், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர் கொண்ட அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழு மதுரை பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், ரயில் நிலையம், தெப்பக் குளம், மாவட்ட நீதிமன்றப் பகுதி  உட்பட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று குழந்தைகளுடன் பிச்சை எடுப்பவர்களை கண்காணித்தனர். அப்போது 29 பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் 35 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாங்கள் பிச்சை எடுக்கவில்லை, பொருட்கள் விற்கிறோம். மேலும் கரோனாவால் அங்கன்வாடி திறக்காத சூழலில் அவர்களை வீட்டில் தனியாக விட்டு வர முடியவில்லை  எனத் அவர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறினர்.