திருப்பூர் மாநகரத்தில் இருந்து தாராபுரம் நோக்கி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை NH – 381 A ல் வேலம்பட்டியிலும், வேலம்பட்டியில் இருந்து தாராபுரம் நோக்கி செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் SH – 81 ல் காதப்புள்ளப்பட்டியிலும், வேலம்பட்டியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பல்லடம் நோக்கி செல்லும் சாலையில் NH – 81 ல் மாதப்பூரிலும் சுங்கச்சாவடிகள் மிக வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன.
National Highways Fee rules – 2008 , Rule 8 (1) ன் படி நகராட்சி பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி அமைக்க கூடாது, ஆனால் தற்போது பல்லடம் நகராட்சி எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு உள்ளேயே சுங்கச்சாவடி சட்டவிரோதமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தல் அமைக்கப்பட்டு வருகிறது, மேலும் இந்த சுங்கச்சாவடி வேலம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து 10 கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ளது. மேற்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதி 8 (2) ன் கீழ் மாதப்பூரில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி விதிகளுக்கு முரணானதாகும்.
அவிநாசி பாளையத்திலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி செல்லும் வழியில் காதப்புள்ள பட்டியில் மாநில நெடுஞ்சாலை SH – 81 இல் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி வேலம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, ஒரே திசையில் நோக்கி செல்லும் போது 60 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி அமைக்க கூடாது என்று மேற்கண்ட விதி 8 (2) கீழ் தேசிய நெடுஞ்சாலைய ஆணையம் விதியை வகுத்துள்ளது, ஆனால் விதிகளை மீறி மாநில நெடுஞ்சாலை துறை சுங்கச்சாவடி அமைத்து வருகிறது.
திருப்பூரின் தெற்கு பகுதியில் 20 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மூன்று சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது சிறு – குறு தொழில் முனைவோர்களையும், விவசாயிகளையும் சுரண்டுவதற்கு வழிவகுக்கும். இந்தப் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், பள்ளி – கல்லூரிகள் அமைந்துள்ளன. மேலும் திருப்பூருக்கு கொண்டு வரப்படும் அனைத்து காய்கறிகளும் திருப்பூரின் தெற்கு பகுதியில் இருந்து இந்த சுங்கச்சாவடிகளை கடந்து தான் வருகிறது, எனவே இந்த சுங்கச்சாவடிகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வசூல் செய்யப்படும் போது திருப்பூர் மாநகரத்தில் உள்ள பொதுமக்களும், சிறு – குறு தொழில் முனைவோர்களும், கடுமையாக பாதிக்கப்படக்கூடிய அபாயம் நிலை வருகிறது.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடிகளை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியிடமும், மாநிலத்தில் ஆளும் திமுகவிடமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்படி இந்த சாலைகள் அனைத்துமே நூறாண்டுகளுக்கு மேலாக மக்களின் வரிப்பணத்தில் நிலம் எடுப்பு செய்யப்பட்டவைகள், பெரும்பாலான புதிதாக நிலம் எடுப்பு செய்யாமலும், ஒரு சில இடங்களில் மட்டுமே நிலமெடுப்பு செய்து, அகலப்படுத்தி விட்டு புதிதாக சாலை அமைத்ததற்கு இணையாக கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது தவறானதாகும்.
ஒரு வாகனத்தை வாங்கும் போதே சாலை வரியும், மற்றும் பல்வேறு வரிகளை நாட்டிற்காக செலுத்தும் பொது மக்களை, தொழில் முனைவோர்களை சுங்கச்சாவடிகள் அமைத்து அதிகமாக கசிக்கி பிழியக்கூடாது. திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழில் ஏற்கனவே மிகக் கடுமையாக நசிந்து வருகிறது, இது போன்ற சூழலில் ஒரே பகுதியில் 20 கிலோ மீட்டருக்குள் விதிகளை மீறி மூன்று சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டால் பயணம் செய்வது மிகுந்த கவலைக்குரியது ஆகிவிடும்.
எனவே மத்திய அரசு வேலம்பட்டியிலும் மாதப்பூரிலும் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளையும், தமிழ்நாடு அரசு காதபுள்ளப்பட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடி திட்டத்தையும் ரத்து செய்து திருப்பூர் மாவட்ட மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமாய் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.