சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பனமரத்துப்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மற்றும் மல்லூர், தும்பல்பட்டி, கொண்டலாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பழனி ஆண்டவர் திருமண மண்டபத்தில் காலை 8 மணி அளவில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் காலை 6 மணிக்கு திருமண மண்டபத்தின் முன் குவிய தொடங்கினர்.
அப்போது அவர்கள் கூட்டமாக நின்றதால் பேரூராட்சி அலுவலர்கள் அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றி தனித்தனியே நிற்குமாறு கூறினர். ஆனால் தடுப்பூசி போட வந்தவர்கள் டோக்கன் பெறுவதற்காக தங்களது செருப்புகளை வரிசையில் வைத்து இடம் பிடித்தனர்.