மரணம் என்னும் தூது வந்தது.. அது மங்கை என்னும் வடிவில் வந்தது… சொர்கமாக நான் நினைத்து…இன்று நரகமாக மாறிவிட்டது…
வசந்த மாளிகை படத்தில் வரும் மரணம் என்னும் தூது வந்தது.. அது மங்கை என்னும் வடிவில் வந்தது… சொர்கமாக நான் நினைத்து…இன்று நரகமாக மாறிவிட்டது… என்ற பாடல் வரிகள் போல பல ஆண்களின் வாழ்க்கையில் பெண்கள் விளையாடி கொண்டுள்ளனர். உலகம் முழுவதுமே இருக்கும் சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு தருபவை போலவே இருக்கிறது. சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் பெண்கள் வீட்டிலும், வீட்டிற்கு வெளியிலும் ஆண்களை அவர்களின் கை பொம்மையாக ஆட்டிப்படைகின்றனர்.
ஆண்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஒட்டுமொத்த வாழ்க்கையை வெறுத்து மரணம் மட்டுமே நிரந்திர தீர்வு என முடிவெடுக்கின்றனர். இப்படி மனைவிகளால் கொடுமைக்கு உள்ளாகும் ஆண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்திர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இயங்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் 5 வயதில் மகன் உள்ளனர். கடந்த 2021-ல் தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களது விவாகரத்து மற்றும் ஜீவனாம்ச வழக்குகள் உத்திர பிரதேசத்திலுள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், அதுல் சுபாஷ் தனது கழுத்தில் நீதி தேவை என்று எழுதப்பட்ட காகிதத்தை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து அதுல் சுபாஷ் உடலை கைப்பற்றிய காவல்துறை, அவரது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது பி.என்.எஸ் பிரிவு 108 மற்றும் 3 (5) இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்கொலை முன்னதாக அதுல் சுபாஷ் 24 பக்க தற்கொலைக் குறிப்பு கடிதம் மற்றும் 1.30 மணி நேர வீடியோவை பதிவு செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த வீடியோவில் அதுல் சுபாஷ் பேசுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளில் எனது மனைவி எனக்கு எதிராக ஒன்பது வழக்குகளை தாக்கல் செய்தார். உத்தரபிரதேசத்தின் ஜான்பூரிலுள்ள குடும்ப நீதிமன்றத்தில் 40 முறை ஆஜரானேன்.
எனது மனைவி முதலில் 1 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டார். பின்னர் 3 கோடி ரூபாய் கேட்டார். இதற்கிடையே குழந்தையை பாராமரிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ. 80,000 வழங்க நீதிமன்றம் எனக்கு உத்தரவிட்டது. குடும்ப நல நீதிபதிக்கு முன்னால் என்னை கொச்சைப்படுத்தினர். அப்போது அந்த நீதிபதி என்னை பார்த்து சிரித்தார்.
அப்போது அவர், ‘நீங்கள் இறந்தாலும், உங்கள் சொத்தின் மீது உங்களது மனைவிக்கு உரிமை உண்டு’ என்றும் கூறினார். ரூ.3 கோடிக்கும் குறைவாக தரவேண்டும் என்று உத்தரவிட வேண்டுமானால், 5 லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று நீதிபதி கேட்கிறார். இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஆண்களுக்கு ஏற்படும் வீட்டு வன்முறை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் மனைவியின் சித்திரவதை தாங்க முடியாமல் மும்பையைச் சேர்ந்த பிரபல ஐடி நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை முன்னாள் அதிகாரி நரேந்திர சர்மாவின் மகன் மானவ் ஷர்மா மும்பையிலுள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். அவருக்கும் நிகிதா சர்மா என்பவருக்கும் கடந்த 2024 -ஆம் ஆண்டு ஜனவரி 30 -ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தனது மனைவியை அழைத்துக்கொண்டு மும்பைக்கு மானவ் ஷர்மா சென்றார்.
இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு மானவ் சர்மா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது அலைபேசியில் மொத்தம் 6 நிமிடங்கள் 57 நொடிகள் ஓடும் வீடியோ ஒன்று இருந்தது. அந்த வீடியோவில்,” என்னைப் பெற்ற தாய் தந்தை மன்னித்து விடுங்கள். எனக்கு வேற வழி தெரியவில்லை. மனைவியின் சித்திரவதை தாங்காமல் ஆண்கள் பலர் தனிமைப் படுத்தப்படுகிறார்கள்.
ஆண்களைப் பற்றியும் அவர்கள் கஷ்டங்கள் பற்றியும் பேச யாராவது முன்வர வேண்டும். என் மனைவியின் கொடுமை தாங்க முடியாது என்பதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி மனைவி விவாகரத்து கேட்கிறார். மேலும் ஏற்கனவே அவருக்கு பழக்கமான காதலனுடன் வாழ விருப்பமாக இருக்கிறார்” என கூறியிருந்தார். ஏற்கனவே பெங்களூருவை சேர்ந்த இளைஞர் மனைவியின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மும்பையிலும் அதே போன்று ஒரு தற்கொலை சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.