டிடிவி தினகரன் கேள்வி: தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைப்பது எப்போது ?

தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைப்பது எப்போது ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வரும் சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரமணி. அதே பகுதியை சேர்ந்த மதன் குமார் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆசிரியை ரமணியின் வீட்டிற்கு சென்று மதன் குமார் பெண் கேட்டுள்ளார்.

ஆனால் ஆசிரியை ரமணியின் குடும்பத்தினர் மதன் குமாருக்கு பெண் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன் குமார் இன்று காலை ஆசிரியை ரமணி பணிபுரியும் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ரமணியின் கழுத்தில் குத்தியதில் படுகாயமடைந்தார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

அண்மையில் கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நடந்திருக்கும் இந்த கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது .

எனவே, இனியாவது விழித்து தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்: தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், லோக்சபா தேர்தல் வந்துவிட்டதால், கடந்த ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்ற தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கு பிறகு தேர்தல் முடிந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை உயர்த்தியிருந்தது. அதன்படியே, தமிழ்நாட்டிலுள்ள 36 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, சென்னசமுத்திரம், எலியார்பதி, கொடை ரோடு, கிருஷ்ணகிரி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி, நாதக்கரை, ஸ்ரீபெரும்புதுார், ஓமலுார், பாளையம், புதுார் பாண்டியபுரம், சமயபுரம், ஸ்ரீவைகுண்டம், வீரசோழபுரம், வேலன்செட்டியூர், விஜயமங்கலம், விக்கிரவாண்டி ஆகியவை கட்டணம் உயர்த்தப்பட உள்ள சுங்கச்சாவடிகள். இங்கு, 5 சதவீதம் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதனால், வாகனங்களின் டயர்களுக்கு தகுந்தபடி, 5 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. அதேபோல, 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக தகவல் பரவி வருகிறது.

முதலில் 25 சுங்கச்சாவடிகள், அடுத்து 17 சுங்கச்சாடிவகள், அடுத்து, 26 சுங்கச்சாவடிகள் என மாறி மாறி கட்டண உயர்வு வெளியாகி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முறையான அறிவிப்பை வெளியிடாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்கிறார்கள். சரக்கு வாகனங்கள்: ஏற்கனவே சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் மறைமுகமாக உயர்ந்து வரும்நிலையில், சுங்கக்கட்டணமும் உயர்வது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, சாலை அமைப்பிற்கான கட்டணத்தை வசூல் செய்தபிறகு, சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க துவங்கியிருக்கிறது. அதேபோல, சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அச்சம் தெரிவித்துள்ளார். எனவே, சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.