காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குடும்பம் குறித்து ஆபாச பதிவு..! தட்டி தூக்கிய காவல்துறை.. !

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன், குறிப்பிட்ட சமூக மக்களை இழிவாக பாடல் பாடி வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிபதியால் கண்டிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவரை தொடர்ந்து எந்த வார்த்தை பேசக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டாரோ, அதே வார்த்தையை பொதுமேடையில் பேசி சர்ச்சையில் சீமான் சிக்கினார்.

கடந்த ஆகஸ்ட் 4 -ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து பொதுமேடையில் தொண்டர்கள் மத்தியில் அவ்வளவு ஆபாச வார்த்தைகளை பேசிய சீமானுக்கு கண்டனங்கள் குவிந்தது. தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த சமயத்தில்தான் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும் இப்படிப்பட்ட வெறுப்பு பேச்சுகளை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். சீமானுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியதால், எஸ்.பி. வருண்குமார் மீது நாதக நிர்வாகிகள் அவதூறு பரப்பி வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அவரது மனைவி, அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதள பக்கத்தில் ஆபாசமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைவன் எவ்வழியோ…என்பதற்கு ஏற்றாற்போல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் அதே போல் அருவருக்கத்தக்க வகையில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த சூழலில் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகார் அளித்தார். அந்த புகாரில், “நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கண்ணன் என்பவர் எனது குடும்பத்திற்கு ஆபாச வார்த்தைகளால் மிரட்டல் விடுத்துள்ளார்.

இவை அனைத்தும் முழுக்க முழுக்க இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன், சீமானின் தூண்டுதலிலேயே நடக்கிறது. குறிப்பாக திட்டமிட்டு என் மீதும் என் குடும்பத்தின் மீதும் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை ஆகும். காவல்துறை கண்காணிப்பாளர் குடும்பத்திற்கே கொலை மிரட்டல், குறிப்பாக என் தாய்க்கும், என் மனைவிக்கும் ஆபாசப் பாடல் மூலம் அவதூறு பரப்பி உள்ளார்.

என் மனைவி ஒரு சாதாரண குடும்பப் பெண் மட்டும் இல்லை, அவர் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆவார். ஆகையால் என்னையும், என் குடும்பத்தினருக்கும், கொலை மிரட்டல் விடுத்தது மட்டும் அல்ல, ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவரை அதிரடியாக கைது செய்து, திருச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.