கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளை பகுதியை சேர்ந்த பீனா என்பவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில் இவரின் ஒரே மகள் ஆதிரா உறவினர் வீட்டில் தங்கி களியக்காவிளையில் உள்ள கத்தோலிக்கக் கல்லூரி பி.காம். இரண்டாமாண்டு படித்து வருக்கிறார்.
இந்நிலையில் மாணவி ஆதிரா கடந்த 23-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பளுகல் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
கடந்த மாதம் 15-ம் தேதி, ஆதிரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் ஒரு புகார் மனு கொடுத்தது தெரிய வந்தது. அந்த புகார் மனுவில், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனக்கு அறிமுகமாகி, ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடன் பழகி, தற்போது தனது புகைப்படங்களை மார்பிங் செய்து, சமூக வலை தளத்தில் வெளியிட்டு தனது தாயாரிடம் ரூ.10 லட்சம் வரை கேட்டு மிரட்டுவதாகவும், அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டதாகவும் கூறியிருந்தார்.
மேலும், அந்த வாலிபரின் நண்பர் ஒருவரும் தன்னை தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வருவதாகவும் கூறியிருந்ததாக தெரிகிறது. இந்த புகாரை சைபர் க்ரைம் காவல்துறை விசாரிக்க எஸ்.பி. உத்தர விட்டார். ஆனால் சைபர் க்ரைம் காவல்துறையினர் ஒரு மாதம் முடிந்து விசாரிக்காத காரணத்தால் மாணவி மனமுடைந்து இருந்துள்ளார்.
இந்நிலையில் மாணவியை சம்பந்தப்பட்ட நபர் தொடர்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இனி காவல்துறையை நம்புவது பயனில்லை என உணர்ந்த ஆதிரா செய்வதறியாது தனது உயிரை மாய்த்துக் கொண்டார். காவல்துறையினர் உங்களின் நண்பன் என வெளி உலகிற்கு வெத்து விளம்பரங்களை செய்து கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறை மாணவி ஆதிரா மறைவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது.
இந்திய அரசியல்வாதிகளை போல காவல்துறை வெத்து விளம்பரங்களை செய்து கொண்டுள்ள இருக்காமல் துரிதமாக செயல்பட்டு அப்பாவி மக்களை காப்பாற்றுவார்களா? இல்லை மாணவி ஆதிரா போல தற்கொலை செய்யும் வரை வேடிக்கை பார்ப்பார்களா?