சென்னை, கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி என SRM தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பல்கலைக்கழகம் சார்பாக மறைமலைநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், தங்களது பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில், மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்பு படித்து தோல்வியடையும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் கூறி, ஒரு கும்பல் பணம் பெறுவதாக கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பணம் கொடுத்த மாணவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.
அதில், மாணவர்களிடம் நூதன முறையில் பேசி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த கன்னியாகுமரியை சேர்ந்த வருண் கார்த்திக் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த காவல்துறை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து வருண் கார்த்திக்கிற்கு உதவியாக இருந்த அவரது தம்பி எழிலரசு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் பிரகாஷ் ஆகியோரையும் காவல்துறை கைது செய்தனர். இந்த 3 பேரிடம் இருந்து ரூ.13,20,000 ரொக்கம், ஒரு மடிக்கணினி, 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.