கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குழந்தையை பள்ளியில் விட வந்த தொழிலதிபரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்ற பள்ளி ஆசிரியை உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.குழந்தையை பள்ளியில் விட வந்த தொழிலதிபரை மயக்கி பணம் பறித்ததோடு ஒரு முத்தத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் கழிந்து விட்டது எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என பணம் கேட்டு மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நாடெங்கும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் பல்வேறு விதங்களில் தினுசு தினுசாக குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பெங்களூருவில் அரங்கேறி உள்ள மோசடி நம்மை எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே மகாலட்சுமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ராகேஷ், தனது மூன்று குழந்தைகளை இஸ்கான் கோவில் அருகில் இருக்கும் பிளே ஸ்கூலில் சேர்த்து இருக்கிறார். அவர்களை தினமும் தனது காரிலேயே ராகேஷ் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்று மாலையில் மீண்டும் வீட்டுக்கு கூட்டி வருவது வழக்கமாம். அப்பொழுதுதான் அந்த பள்ளியின் ஆசிரியை ஸ்ரீதேவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
முதலில் குழந்தைகளின் படிப்பு தொடர்பாக செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டவர்கள் தொடர்ந்து அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பழக்கம் நெருக்கமாக மாற இருவரும் பல இடங்களில் சுற்றி திரிந்து இருக்கின்றனர். இந்நிலையில் பிளே ஸ்கூல் விரிவாக்கம் செய்ய பள்ளியின் நிர்வாகிகள் பணம் கேட்பதாக ராகேஷிடம் பணம் பெற்று இருக்கிறார் ஸ்ரீதேவி.
மேலும் தனது பெற்றோருக்கு உடம்பு சரியில்லை எனக் கூறி நான்கு லட்சம் ரூபாயை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கொடுத்த பணத்தை ராஜேஷ் திரும்ப கேட்டிருக்கிறார். அப்போது தற்போது பள்ளி நிர்வாகத்திலும் பணம் இல்லை எனவே அதன் பங்குதாரர் ஆகிவிடுங்கள் எனக் கூறி நிர்வாகத்திடம் பேசி பார்ட்னர் ஆக்கி இருக்கிறார் ஸ்ரீதேவி. தொடர்ந்து இருவருக்கும் நெருக்கம் மேலும் அதிகரித்து தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
” ஒரு கட்டத்தில் ராகேஷிக்கு பண நெருக்கடி ஏற்பட தான் கொடுத்த பணத்தை தர வேண்டும் என ஸ்ரீதேவியிடம் கேட்டிருக்கிறார். பணத்தை தொடர்ந்து கேட்டதால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதேவி தனக்கு கொடுத்த ஒவ்வொரு முத்தத்திற்கும் 50 ஆயிரம் கழிந்து விட்டது. இனிமேல் நீ தான் எனக்கு பணம் தர வேண்டும் என மிரட்டி இருக்கிறார். மேலும் தன்னிடம் உல்லாசமாக இருந்ததற்கு 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ் அவருடன் பேசுவதை தவிர்த்து இருக்கிறார். இந்நிலையில் என்னுடன் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என கூறி ஒரு கோடி ரூபாய் கேட்டு ராகேஷை மிரட்டியதோடு அவரை தனது காதலன் சாகர், ரவுடி கணேஷ் ஆகியோர் உடன் சேர்ந்து காரில் கடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ராகேஷிடம் இருந்த சுமார் 2 லட்சம் ரூபாயை பறித்த கும்பல் கோரகுண்டே பாளையத்தில் இறக்கி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது
இது குறித்து ராகேஷ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்த காவல்துறை தலைமறைவாக இருந்த ஸ்ரீதேவி, சாகர், கணேஷ் ஆகியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.