ஆன்மீகம் குறித்தும் நீதி போதனை குறித்தும் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும் என ஹெச் ராஜா தெரிவித்தார்.சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் மகாவிஷ்ணு மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.
இந்நிலையில், அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் மகாவிஷ்ணு மாணவிகள் மத்தியில் முன் ஜென்மம் பாவ புண்ணியம் குறித்தெல்லாம் பேசியுள்ளார். அங்கிருந்த ஒரு ஆசிரியர் மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், மகாவிஷ்ணு தனது சர்ச்சை பேச்சைத் தொடர்ந்தார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மகாவிஷ்ணுவுக்கு எதிராகக் காட்டமான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.மேலும் பலரும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று அடுத்த சில நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை இடமாற்றமும் செய்யப்பட்டார். காவல்துறையினரும் மகாவிஷ்ணுவுக்கு எதிராக விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் ஹெச் ராஜா கருத்து கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது ஹெச் ராஜா, “இந்த திராவிட மாடல் என்பவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முதலில் செய்தது என்ன தெரியுமா.. நீதி போதனை வழக்குகளை ரத்து செய்தார்கள். ஆட்டையைப் போட வந்தவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் அறம் செய்ய விரும்பு எனக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் அவர்கள் அதை நீக்கிவிட்டார்கள்.மேலும், ஆன்மீகம் குறித்தும் நீதி போதனை குறித்தும் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும் என்றும் அதை எதிர்க்கக்கூடாது என ஹெச் ராஜா தெரிவித்தார்.