நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கிற்கு பிடிவாரண்டு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கள்ளிப்பாளையத்தை சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் மகன் விவசாயி ராசப்பன். ராசப்பன் நில பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது தொடர்பாக அவர் பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராசப்பன் நில பட்டாவில் உள்ள கோவில் சாமிகளின் பெயர்களை நீக்கி தனி பட்டாவாக வழங்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர், பரமத்திவேலூர் தாசில்தார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்போதைய பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே நீண்ட காலமாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்ததால், இதுதொடர்பாக ராசப்பன் மீண்டும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் படி மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர், திருச்செங்கோடு உதவி ஆட்சியர் மற்றும் பரமத்திவேலூர் தாசில்தார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, திருச்செங்கோடு உதவி ஆட்சியர் இளவரசி மற்றும் பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நேற்று பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.

பட்டுக்கூடு அங்காடியை சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து திமுக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில், பட்டுக்கூடு அங்காடியை இன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் திறந்து வைத்தார்.

பெண் ஆட்சியர் அதிரடி: அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 17-ந் தேதி புதியதாக பொறுப்பேற்று ஆட்சியர் ஸ்ரேயா சிங் 3-வது பெண் ஆட்சியர் ஆவார். ஸ்ரேயா சிங் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அதன்வரிசையில் நேற்று கொல்லிமலைக்கு ஆய்வு கொண்டு, அலுவலகத்திற்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சேந்தமங்கலம் ராமநாதபுரம்புதூர் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக மண் ஏற்றி வந்த லாரியை மடக்கி நிறுத்தி சோதனை செய்தார். அப்போது உரிய அனுமதியின்றி மண் ஏற்றி வருவதை அறிந்த அவர் லாரியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.