வங்க கடலோரம் அமைந்துள்ள கடலுக்குள் காற்றாலை அமைப்பது தொடர்பாக சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. குஜராத்திற்கு அடுத்தபடியாக சுமார் 1076 கிலோ மீட்டர் மிக நீளமான கடற்கரையை கொண்ட இந்தியாவின் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. புவி வெப்பமயமாதலால் உலகின் தட்பவெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக புவி வெப்ப மயமாதலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக புதுப்பிக்க கூடிய எரிசக்தியை பயன்படுத்த உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில், உலகம் முழுவதும் பல முன்னேறிய நாடுகளில் கடலில் காற்றாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த காற்றாலை மூலமாக மின்சாரம் தயாரிக்கும் போது எந்த மாசும் ஏற்பட போவது இல்லை. அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்களில் மின் உற்பத்தியை ஒப்பிடும் போது இதில் கார்பன் உமிழ்வு உள்ளிட்டவை கிடையாது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளும் இதனை விரும்ப தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இந்தியாவின் மிக நீளமான கடற்கரை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ள தமிழகமும் கடலில் காற்றாலை அமைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முடிவை கையில் எடுத்துள்ளது. வங்க கடலோரத்தில் அமைந்துள்ள தமிழகத்தில் கடல் காற்று நிலையானதாக இருக்கும். இதனால், நம் நாட்டிலேயே இங்கு தான் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் எளிதாக செயல்படுத்த முடியும் என்பது நிபுணர்கள் வாதமாக உள்ளது.
கடலில் காற்றாலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். இதற்காக விரைவில் டென்மார்க் நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது எனவும் அப்போது முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லபடுகிறது. கடலில் காற்றாலை அமைப்பதற்கான டெக்னாலஜி என்பது இந்தியாவில் இல்லை. இதனால், டென்மார்க்கில் இருந்து கொண்டு வந்து இந்தியாவில் முதல் முறையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாடு மின்மிகை மாநிலம் ஆவதோடு, புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். தென் மாவட்டங்கள் கடலோர பகுதிகள் இதனால், வளர்ச்சி அடையும். கடலில் காற்றாலை அமைத்து, பெரிய ராட்சத குழாய்களை பயன்படுத்தி அதற்குள் வயர்கள் பதித்து மின்சாரத்தை கரைக்கு கொண்டு வரப்படும். இதற்காக புதிய காற்றாலைகளை உருவாக்க வேண்டும். விரைவில் இந்த பணிகள் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக டென்மார்க்கில் உள்ள டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி, டென்மார்க் தூதரகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் இடையே உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை மவுண்ட் ரோடில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. நடைபெற்றது.