திருப்பதியில் லட்டு மட்டும் நெய்யில் தயாராகவில்லை. சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் எனப் பல பிரசாதங்களில் ஒரே நெய்தான் பயன்படுத்தப்படுகிறது. அதில் எல்லாம் ஏன் கொழுப்பு கலக்கவில்லை? நெய்க்கு மட்டும் எப்படி தனியாகப் போய் கலந்தது? ஒரு பொய்க்காக எத்தனை பொய் சொல்கிறார் நாயுடு? என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஆந்திர சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சரான ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியிலிருந்தபோது திருப்பதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் மிருகத்தின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டுள்ளது என்ற ஒரு புதிய புகாரை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். அதற்கு முழுப் பொறுப்பு ஜெகன்மோகன் ரெட்டி தான் என சந்திரபாபு நாயுடு பேசியது நாடு முழுவதும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை எதையும் நடத்தாமல் நாயுடு பேசியது பற்றி பலரும் கேள்வி எழுப்பி நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றம் லட்டின் ஆய்வு அறிக்கையில் மிருகத்தின் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறி சந்திரபாபு நாயுடுவின் கருத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது
இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஆந்திர சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சரான ரோஜா அவர்கள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் புகாரில் எவ்வளவு முரண்பாடுகள் உள்ளன என்பதைப் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.
மதுரையில் ரோஜா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “நான் ஒரு மாதம் முன்பாக தான் திருப்பதி லட்டு சாப்பிட்டேன். நல்ல ருசியாக இருந்தது. கோயில் பிரசாதங்களில் திருப்பதி லட்டை அடித்துக் கொள்ளும் அளவுக்கு வேறு ஒன்றும் கிடையாது. லட்டை வைத்து சந்திரபாபு நாயுடு அழுக்கான அரசியலைச் செய்து வருகிறார்.
சந்திரபாபு நாயுடுவுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை. கடவுள் மீது பயம் இல்லை. அவர் சுயநலத்திற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்க தயாராக இருப்பார். இப்போது ஓட்டுப் போட்ட மக்களையே பலி கொடுக்க துணிந்துவிட்டார். அவர் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை அவர் வாக்குறுதி அளித்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவே இல்லை. ஆந்திராவில் வந்த மழை வெள்ளத்தில் சிக்கி பலர் இறந்துவிட்டனர். அதற்கு சந்திரபாபு நாயுடுவின் அஜாக்கிரதையே காரணம்.
விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலையைத் தனியாருக்குத் தர சந்திரபாபு நாயுடு இருக்கிறார். அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க உள்ளனர். இதனால் சந்திரபாபு நாயுடு ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதை மறைக்கத்தான் இந்த லட்டு நாடகம். அவர் பக்தி இல்லாதவர். எந்த பூஜை நிகழ்ச்சிகளிலும் ஷு போட்டுக் கொண்டுதான் பூஜை செய்வார். விஜயவாடாவில் கிருஷ்ணா புஷ்கரா என்று சொல்லிப் பல கோயில்களை உடைத்துத் தள்ளியவர் நாயுடு. அவர் நடத்திய துர்கா பூஜை பற்றி பெரிய சர்ச்சையே வந்தது.
திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு சில நாட்களில் விற்பனையாகிவிடும். எங்கள் ஆட்சி முடிந்து இத்தனை மாதங்களாகிவிட்டது. அப்போது நெய்யில் என்ன கலந்தார்கள் என்று இப்போது எப்படிக் கண்டுபிடித்தார் நாயுடு? ஜூலை மாதம் 17 -ஆம் தேதிதான் நெய் கண்டெய்னர் வந்தது. அதைச் சோதனைக்கு அனுப்பினார்கள். 23 -ஆம் தேதி அறிக்கை வந்தது. அந்த அறிக்கையில் லட்டில் வனஸ்பதி மாதிரி சைவ எண்ணெய்தான் கலக்கப்பட்டுள்ளது. அதனால் 2 நெய் கண்டெய்னரை திருப்பி அனுப்பிவிட்டோம் என்று நாயுடு அரசு சொல்லி இருக்கிறது.
ஜூன் மாதமே சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகப் பதவியேற்றுவிட்டார். அவர் ஆட்சியில் உடனே திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். 2014 முதல் 19 வரை 15 முறை நெய் கண்டெய்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் முதலமைச்சராக இருந்தபோது 18 முறை நெய் லாரியை சோதனைக்குப் பின் திரும்ப அனுப்பி இருக்கிறோம். வனஸ்பதி ஆயில் அல்லது டால்டா எனச் சின்ன அளவில் கலப்படம் இருந்தால் கூட கோயில் நிர்வாகம் உடனடியாக அதை நிராகரித்துவிடும். இது வழக்கமான நடவடிக்கைதான்.
ஆந்திர அரசாங்கத்திற்குச் சொந்தமான டிடிடி லேப் பரிசோதனையில் வனஸ்பதி என வந்த ஆய்வு அறிக்கையைத் தாண்டி சந்திரபாபு நாயுடு குஜராத் போய் நெய்யைப் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்? பல ஆண்டுகளாக இங்கேதானே பரிசோதனை நடக்கிறது? இந்தியாவில் பல லேப் உள்ளது. ஏன் குஜராத் போனார். அதுவும் அரசாங்க லேப் இருக்கும் போது ஏன் தனியார் லேப் பரிசோதனைக்கு நாயுடு நெய்யை அனுப்பினார்? அதன் உள்நோக்கம் என்ன? எனவே அது ஒரு பொய்யான அறிக்கை. என்னிடம் ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதல் நெய் கொள்முதல் செய்த அறிக்கை இருக்கிறது.
2014-இல் அக்டோபர் மாதம் மட்டும்தான் நந்தினி கம்பெனிக்கு நெய் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது முதலமைச்சர் நாயுடுதான். 2015-க்குப் பிறகு நந்தினி நிறுவனத்திடம் நாயுடு ஒருமுறை கூட நெய் கொள்முதல் ஒப்பந்தத்தைக் கொடுக்கவே இல்லை. ஆனால், இப்போது நந்தினியிடம் கொடுக்காமல் குறைந்த விலைக்கு ஜெகன்மோகன் ரெட்டி டெண்டர் விட்டதுதான் பிரச்சினை என ரோஜா தெரிவித்தார்.
மேலும் ரோஜா பேசுகையில், திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானமே வனஸ்பதி கலந்த நெய்யைப் பயன்படுத்தவில்லை எனப் பத்திரிகை செய்தி வெளியிட்டு 2 மாதங்கள் கழித்து நெய்யில் மிருக கொழுப்பு கலந்துவிட்டது என முதலமைச்சர் நாயுடு சொல்கிறார்.
இது எவ்வளவு பெரிய பொய்? திருப்பதியில் லட்டு மட்டும் நெய்யில் தயாராகவில்லை. சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் எனப் பல பிரசாதங்களில் ஒரே நெய்தான் பயன்படுத்தப்படுகிறது. அதில் எல்லாம் ஏன் கொழுப்பு கலக்கவில்லை? நெய்க்கு மட்டும் எப்படி தனியாகப் போய் கலந்தது? ஒரு பொய்க்காக எத்தனை பொய் சொல்கிறார் நாயுடு?
இது முழுக்க முழுக்க திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள விசயம். அந்த நிர்வாகம் தனி என்று சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் கூறியுள்ளார். ஜெகன் ஆட்சியில் தவறு நடந்திருந்தால் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தேவை என எப்படி நாங்கள் கேட்போம்? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எப்படிக் கேட்க முடியும்?” போன்ற கேள்விகளை ரோஜா ஆதாரங்களுடன் அடுக்கி கொண்டே போனார்.