ஜார்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பய் சோரன் அரசு வெற்றி..!

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பய் சோரன் பதவியேற்றதை அடுத்து, அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசுக்கு ஆதரவாக மற்றும் எதிராக உள்ளவர்கள் எழுந்து நிற்க சொல்லி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் ஜேஎம்எம் கூட்டணிக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளதாக கூறி நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசு வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். ஆளும் கூட்டணிக்கு எதிராக 29 எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சியான பாஜக தரப்பைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தனர்.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் தேவை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒரு இடம் காலியாக உள்ளது. எஞ்சியுள்ள 80 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஜேஎம்எம் கூட்டணிக்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 47 உறுப்பினர்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை முதலமைச்சர் சம்பய் சோரன் நிரூபித்தார். இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.