சேலம் மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காக வாடகைக்கு ஆட்டோக்கள் எடுத்து அதன்மூலம் வீதி, வீதியாக சென்று கொரோனா பரிசோதனையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். 60 வார்டுகளிலும் கொரோனா பரிசோதனைக்காக 80 ஆட்டோக்கள் பயன்படுத்தப்பட்டன.
இதற்காக ஒரு ஆட்டோவுக்கு தினமும் ரூ.1000-ம் என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததாக தெரிகிறது. 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை ஆட்டோக்களுக்கு வாடகை கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே ஆட்டோக்களுக்கு வாடகை தொகையை உடனே வழங்க வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் நேற்று மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.