சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது… வாகா- அட்டாரி எல்லைகளை மூடல் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், இந்தியாவை விட்டு ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும் போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக ஜம்மு – காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் இருக்கிறார்கள். மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய ஊர்.
இந்த பஹல்காம் பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள்.
இங்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அதிவேகமாக களம் இறங்கினார்கள். அப்போது திடீரென அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் காவல்துறை விரைந்து சென்று பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு, அண்மைக்காலமாகவே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தார்கள். மெல்ல மெல்ல நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எண்ணத்தை பயங்கரவாதிகள் அழிக்க வேண்டும் என்று நினைத்து தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சவூதியில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதேபோல ஜம்மு காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படையினருடனும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் தற்போது பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது… இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும், வாகா-அட்டாரி எல்லைகளை மூடல் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், இந்தியாவை விட்டு ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும். – பாகிஸ்தானியர்களுக்கு இனி சார்க் விசா வழங்கப்படமாட்டாது. – இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற கெடு பாகிஸ்தானின் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை 55-ல் இருந்து 30 ஆக குறைப்பு போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.