மம்தா பானர்ஜி ஆவேசம்: தேவைப்பட்டால் கொலையாளிகளை தூக்கில் போடுவேன்…!

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு அப்பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அப்பெண் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்துள்ளார்.

அவர் வியாழக்கிழமை இரவுப் பணியில் இருந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியின் கழுத்து எழும்பு முறிக்கப்பட்டுள்ளது. அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் உள்ளன. பிறகு அவரது மூச்சை நிறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று மருத்துவர்கள் குழு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். பிரேதப் பரிசோதனையின்போது அவரது தாய் உள்பட இரண்டு பெண்கள் உடனிருந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை. இனி இரவுப் பணிக்கு வரமாட்டோம் என்றும், பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் மருத்துவம் பயின்று வரும் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவமனைக்கு ஊர்வலமாக வந்தனர். எமர்ஜென்சி பிரிவைத் தவிர மற்ற பிரிவு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மம்தா பானர்ஜி, இளநிலை மருத்துவர்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசினேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளேன். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நான் மரண தண்டனைக்கு ஆதரவானவர் அல்ல. இருப்பினும் தேவைப்பட்டால் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள். அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.