4 வயது சிறுமி பலியான சம்பவம்.. தனியார் பள்ளியின் உரிமம் ரத்து!

4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மழலையர் பள்ளியின் தாளாளர், உதவியாளர் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த தம்பதியர் தமது 4 வயது மகளை மதுரை K K.நகரிலுள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் சேர்த்தனர். சிறுமியின் பெற்றோர் வழக்கம் போல நேற்று காலை, பள்ளியில் விட்டனர். காலை 11 மணியளவில் பள்ளி வளாகத்தில் விளையாடிய சிறுமியை திடீரென காணவில்லை. பள்ளி வளாகம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி, அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அண்ணா நகர் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.

கார் ஓட்டுநர் ஒருவர் உள்ளே சென்று சுமார் 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த குழந்தையை மீட்டார். பின்னர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தைகள் நடமாடும் பகுதியில் தண்ணீர் தொட்டியை அஜாக்கிரதையாக திறந்து வைத்திருந்தது தொடர்பாக பள்ளி தாளாளர் திவ்யா ராஜேஷ், உதவியாளர் வைரமணி ஆகியோரை கைது செய்து 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து அந்த பள்ளியை இழுத்து மூட வேண்டும் என பெற்றோர்கள் கூறி வந்த நிலையில், அந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து பள்ளிக்கு சீல் வைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.