ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டிய மாணவிகளுடன் கொண்டாட்டம்..!

நாட்டில் சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் தினம் நாடெங்கும் நேற்று கொண்டாடப்பட்டது. ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு நேற்று வந்த பள்ளி மாணவ, மாணவிகள் அவரது கையில் ராக்கிக் கயிறு கட்டினர். அப்போது மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பலரும், பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

முன்னதாக பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத் தில் கூறும்போது, ‘சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமான ரக்ஷா பந்தன் நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த புனிதமான நாளில், உங்கள் அனைவரின் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி: சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது..!

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான அண்ணன் – தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் தங்களுடைய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ராகுல் காந்தி தனது பதிவில், “ரக்‌ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் – தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகை. இந்த பாதுகாப்புக் கயிறு, எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது, அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமையின் கதைகள் மற்றும் நட்பை ஆழமாக்குவதற்கான மரியாதை ஆகியவை அன்பு மற்றும் பரஸ்பர புரிதலின் அடித்தளத்தில் செழித்து வளரும்” என பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.