கல்வி கொடை வள்ளல் ராஜேந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்த மு.க. ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்றும் மதுரை சென்றார். நேற்று இரவு முனிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் சிலையைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் மதுரை விமான நிலைய சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு ஓய்வெடுத்தார்.

இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை சிலைமான் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, அங்குள்ள முரசொலி மாறன் படிப்பகத்தை பார்வையிட்டு அண்ணா மன்றத்தின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

பின்னர் மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை ரூ. 1.10 கோடி செலவில் அமைத்து தந்தமைக்காகவும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை ரூ. 71.45 இலட்சம் செலவில் அமைத்து தந்தமைக்காகவும், மேலும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த திரு. ராஜேந்திரன் அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைத்து சிறப்பித்து, தனது வாழ்த்துகளை தெரிவித்து, சால்வை அணிவித்து, அவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை வழங்கி பாராட்டினார்.