50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் வரை மானியமாக வழங்கும் வேளாண் எந்திரங்கள் வாங்குவதற்கு சிறு, குறு, விவசாயிகள், ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் R.V. ஷஜீவனா அறிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் R.V. ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில், அரசு மானியத்தில், மின் மோட்டார்கள் வழங்குதல் மற்றும் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தங்களது பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார்கள் வாங்குவதற்கும், புதிய விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய மின்மோட்டார்கள் வாங்குவதற்கும், மின்மோட்டார் மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க இயலும். இந்த திட்டத்தில் பின்னேற்பு மானியமாக மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். விவசாயிகள் இருப்பிடத்தில் இருந்தே, செல்போன் மூலம் மின்சார பம்பு செட்டுகளை இயக்கும் கருவி மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் விவசாயிகள் எங்கிருந்தாலும் தங்களின் செல்போன் மூலம் பம்பு செட்டுகளை இயக்கவும் கண்காணிக்கவும் முடியும். இந்த தானியங்கி பம்பு செட் கட்டுப்படுத்தும் கருவிகள் சிறு, குறு, விவசாயிகள், ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் வரை மானியமாகவும், மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது ரூ.4 ஆயிரம் வரை மானியமாகவும் வழங்கப்படும்.
மேலும் சிறு தானிய இயக்கத்தின் கீழ் தரிசு நிலங்களில், சிறுதானிய சாகுபடிக்கான, உழவுப்பணிக்காக ஒரு ஹெக்டேருக்கு ரூ.5,400 வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு ரூ.10,800 வரை மானியம் பெறலாம். இந்த திட்டங்கள் தொடர்பான விவரங்கள் பெறவும், விண்ணப்பங்கள் அளித்திடவும் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கடமலைக்குண்டு வட்டார விவசாயிகள் தேனி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.
கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி வட்டார விவசாயிகள் உத்தமபாளையம் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு தேனி மாவட்ட ஆட்சியர் R.V. ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.