கி.வீரமணி: R.N. ரவிக்கு அறிவு இருக்குமானால் ராஜினாமா செய்துவிட்டு ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியேறு

தெளிந்த அறிவும் இருக்குமானால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, ஆளுநர் மாளிகையைவிட்டு இந்நேரம் வெளியேறி இருக்கவேண்டும என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், ஜனநாயக மாண்புக்கும், ஆளுநர் பதவிக்கு உரிய மதிப்பும் தராத ஆளுநர் R.N. ரவிக்கு கடுகளவு நியாய உணர்வும், சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும் மதிக்கும் உணர்வும், தெளிந்த அறிவும் இருக்குமானால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, ஆளுநர் மாளிகையைவிட்டு இந்நேரம் வெளியேறி இருக்கவேண்டும்.

ஆனால், அவர் அதைச் செய்யாத நிலையில், மீண்டும் மீண்டும் தனக்குள்ள பின்பலத்தினாலோ என்னவோ மீண்டும் சல்லடம் கட்டி ஆடி அரங்கேறுகிறார்; அவமானத்தை பொருட்படுத்தாமலேயே! அவருக்குத் துணையாக, சட்டத்தின் ஆட்சிக்குத் துணையாக இருக்கவேண்டிய குடியரசுத் துணைத் தலைவர், தடம் புரண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உள்நோக்கம் கற்பிப்பதுபோலப் பேசி, பல வழக்குரைஞர்களின், சட்ட நிபுணர்களின் நன்மதிப்பை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்! கண்டனத்திற்கும் ஆளாகியுள்ள அவல நிலை!

இந்நிலையில், ஆளுநர் R.N. ரவி, அரசமைப்புச் சட்டக் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கத் துணை போகும் வண்ணம் அவரது அழைப்பை ஏற்று, தமிழ்நாட்டிற்கு வந்து, R.N. ரவிக்கு ‘நற்சான்று பத்திரம்’ வழங்கி உதகமண்டலத்தில் பேசி, அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆம் பிரிவின்படி, பதவிப் பிரமாணப்படி நடந்துகொள்ளாத ஒருவருக்கு ஆதரவாகப் பேசியிருப்பதைக் கண்டு நாடே நகைக்கும் என்பதில் அய்யமில்லை.

உதகமண்டலத்தில் ஆளுநர் கூட்டிய கூட்டத்திற்கு, துணைவேந்தர்கள் பலரும் சுமார் 32 பேர் போகவில்லை; காரணம், உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பைப் புரிந்துகொண்டதாலும், ஆளுநர் போட்டி அரசு நடத்தும் பொல்லாங்குதனத்துக்குத் துணை போகாமலும் தங்களது கடமையை ஆற்றிடும் தெளிவுடன் இருப்பதாலும்!

இதற்கு நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்மீது வீண் பழிசுமத்தி, தன்னுடைய கோயபெல்ஸ் தனத்தைக் கொடியேற்றிக் காட்டியுள்ளார் ஆளுநர் R.N. ரவி. ஒருமுறையா இந்த ஆளுநர் R.N. ரவி, உச்சநீதிமன்றத்திடம் ‘குட்டு’ வாங்கியிருக்கிறார்? இரண்டு, மூன்று முறை அல்லவா?

படிப்பினை பெற்று தனது பதவியின் கவுரவம், மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் அரசியல் அடாவடித்தனம் செய்வதா? இத்தகையப் போக்கிற்கு ‘நற்சான்றாக’ குடியரசு துணைத் தலைவர் பதவியில் உள்ள ஒருவர் துணை போவது எவ்வளவு நியாயமற்ற போக்கு? முன்னுதாரணம் இல்லாத நிகழ்வும்கூட! கலந்துகொள்ளாத துணைவேந்தர்கள் என்ன சட்டம் தெரியாதவர்களா?

ஏற்கெனவே ஊழல் வழக்கில் சிக்கி, சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரிடம் விசாரணை நடக்கும்போது, மற்றொரு அறையில் இந்த ஆளுநர் R.N. ரவி, சேலம் சென்று தங்கியிருந்ததைவிட மகாமகா ஒழுக்கக்கேடான சட்ட மீறல் வேறு உண்டா? பதவியின் காரணமாக, தன்னை நீதிமன்றத்திற்கு அழைக்க முடியாது என்ற அந்த மதிப்புரிமையை இப்படி இவர் பயன்படுத்தி, அவதூறு செய்வது நியாயமா? சட்டப் பரிகாரம் தேட தமிழ்நாடு அரசும், நீதிமன்றமும் முன்வரவேண்டும்!

ஒரு மாநில முதலமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு, போலீஸ் ராஜ்ஜியம், நெருக்கடி காலம் என்று அழிபழி சொல்லும் ஆளுநர் போன்று, முன்மாதிரி இதற்கு முன் உண்டா? இதற்குரிய சட்டப் பரிகாரம் தேட, தமிழ்நாடு அரசும், நீதிமன்றமும் அல்லது மக்கள் மன்றமும் முன்வந்தாலொழிய, இந்தப் பகிரங்க ஜனநாயக, அரசமைப்புச் சட்ட மீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது, யோசியுங்கள்! என கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகோ காட்டம்: ஏஜெண்டு R.N. ரவியை பாஜக அலுவலகத்தில் வைத்து அரசியல் செய்யுங்கள்..!

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மூக்குடைபட்ட பிறகும் கூட, துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார் ஆளுநர் R.N. ரவி; பாஜகவின் ஏஜெண்டாக செயல்படும் R.N. ரவியை ஆளுநர் பாஜக அலுவலகத்தில் வைத்து கொண்டு அரசியல் செய்யாமல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவியைக் கண்டித்தும், வஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மதிமுக சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். இந்தப் போராட்டத்தில் வைகோ பேசுகையில், ஜனநாயகத்தின் அடித்தளம் என்பது சிறுபாமையினரை பாதுகாப்பதுதான். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அனைத்து மதங்களும் தங்களுடைய உரிமையை இழக்கும் நிலை ஏற்படும்.

இந்தியாவின் ஒருமைப்பாடு காப்பாற்றப்படாது. தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி பெயர்களை சட்டமன்றத்தில் உச்சரிக்க மாட்டேன் என்று R.N. ரவி சொல்கிறார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மூக்குடைபட்ட பிறகும் கூட, துணை வேந்தர்கள் மாநாட்டை R.N. ரவி நடத்துகிறார் . பாஜகவின் ஏஜெண்டாக செயல்படும் R.N. ரவியை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து கொண்டு அரசியல் செய்யாமல், பாஜக கட்சி அலுவலகத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள் என வைகோ கடுமையாக விமர்சனம் செய்தார்.

வஃபு திருத்தச் சட்டம் முதல் ஆளுநர் R.N. ரவி பதவி நீக்கம் செய்ய வேண்டும் வரை:13 தீர்மானங்கள் விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வக்ஃபு திருத்தச் சட்டம் முதல் ஆளுநர் R .N . ரவி பதவி நீக்கம் செய்ய வேண்டும் வரை பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை அசோக் நகரிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் தொல் திருமாவளவன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. ஆளுநரின் அதிகாரத்தை வரையறுத்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரவேற்கிறது. இதற்காக வழக்கு தொடுத்து இந்தத் தீர்ப்பைப் பெற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இக் கூட்டம் பாராட்டுகிறது.

2. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழ்நாடு ஆளுநராக உள்ள திரு ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாண்பமை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

3. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ள ஆளுநர் திரு ஆர்.என்.ரவி மீதும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை அவமதிக்கும் விதமாகக் கருத்து தெரிவித்துள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது

4. மத்திய மாநில உறவுகளை சீராய்வு செய்வதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி திரு குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் மாநில சுயாட்சிக் குழுவை அமைத்திருக்கிற தமிழ்நாடு அரசை இந்தக் கூட்டம் பாராட்டுகிறது

5. அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும்வரை அரசியல் கட்சிக் கொடிகளை அகற்றும் நடவடிக்கையை நிறுத்தவேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது

6. புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளை நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் இருக்கும் தடையை விலக்குவதோடு அதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்திடத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

7. தமிழ்நாடு முழுவதிலும் பெருகிவரும் சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக் கூட்டம் வலியுறுத்துகிறது. விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் பட்டியல் சமூக மக்கள் வழிபடுவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. அவ்வாறு வழிபடச் சென்றபோது பட்டியல் சமூக மக்களை இழிவாகப் பேசி தாக்குவதற்கு முற்பட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

8. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த ஈகியரின் நினைவாக அவர்கள் அனைவரது உருவச் சிலைகளோடும் கூடிய நினைவு மண்டபம் ஒன்றை சென்னையில் அமைத்திடுமாறு தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் போலிஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் அடக்கம் செய்யப்பட்ட பரங்கிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்ப வேண்டும் என்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு சிதம்பரம் நகரை இணைக்கும் மேம்பாலத்துக்கு ராசேந்திரன் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் விசிக சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகிறோம். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது

9. திரு ராகுல் காந்தி அவர்களின் வேண்டுகோளின் பேரில் கர்னாடகா தெலுங்கானா ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ரோஹித் வெமுலா சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கெல்லாம் முன்பாகவே, கல்வி நிலையங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளை அகற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்கிட நீதிபதி கே. சந்துரு அவர்கள் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு அமைத்தது. நீதிபதி கே.சந்துரு ஆணையமும் தனது அறிக்கையை அரசிடம் வழங்கி ஓராண்டு ஆகப் போகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் நீதிபதி கே. சந்துரு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் ரோஹித் வெமுலா சட்டத்தைத் தமிழ்நாடு அரசும் இயற்ற வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

10. இந்திய சனநாயகத்தை விரிவுபடுத்தும் நோக்கோடு உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அங்கு பட்டியல் சமூகத்தினருக்கென ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதற்காக மேலவளவு முருகேசன் உட்பட 7 பேர் சாதி வெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். ஊராட்சி சனநாயகத்துக்காகப் பலியான முருகேசன் உள்ளிட்ட 7 பேரையும் சமூகநீதிப் போராளிகள் என அங்கீகரிக்க வேண்டுமென்றும், மேலவளவு கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து அதை ஒரு முன்மாதிரி கிராமமாக உருவாக்கிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்றும், முருகேசன் உள்ளிட்ட 7 போராளிகளையும் பெருமைப்படுத்தும் விதமாக மேலவளவில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

11. அமெரிக்க அரசு இந்தியப் பொருள்கள் மீது 26 % வரி விதித்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உயர்கல்விப் பெற்றுவரும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து வருகிறது. முறையான அனுமதியின்றி நுழைந்தார்கள் எனக் குற்றம் சாட்டி இந்தியர்களைக் கைவிலங்கு , கால் விலங்கிட்டு அவமானப்படுத்தியது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒன்றிய பாஜக அரசு இதுவரை எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. அத்துடன் இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை குடியரசுத் தலைவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பை மோடி அரசு அளித்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் இறையாண்மையைப் பலியிடுவதாக உள்ளது. அமெரிக்காவின் அடிமையாக மாறிவிட்ட ஒன்றிய பாஜக அரசின் தேச விரோத அணுகுமுறையை இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியாவின் நலனைப் பாதுகாக்க முன்வருமாறு ஒன்றிய அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

12. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென இக்கூட்டம் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. அந்த சட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை உச்சநீதிமன்றம் நீட்டிக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

13. வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் , மதச் சார்பின்மையைப் பாதுகாப்பதை வலியுறுத்தியும் விசிக சார்பில் மாபெரும் பேரணி ஒன்றை மே 31 ஆம் நாள் திருச்சியில் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது