நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கடைவீதி அருகே ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 8 ஆசிரியர்களை முதல்வர் திடீர் பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் முதல்வரை கண்டித்து கொட்டும் மழையிலும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறும்போது, எங்களை ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு குறைந்த சம்பளத்தில் மீண்டும் வேலையில் சேர கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதை கைவிடாவிட்டால் குடும்பத்துடன் பள்ளி முன்பு அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.