மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்னதாக அவர் தனது தந்தை பால்தாக்கரேவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவுரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய 2 நகரங்களின் பெயரை மாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உடனான கூட்டணியில் அதிருப்தி அடைந்த சிவசேனா எம்எல்ஏக்கள் 35க்கும் அதிகமானவர்கள் அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு சென்றது மகராஷ்டிராவில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை திரும்ப அழைக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், எதுவும் பலன் அளிக்கவில்லை. ஆகையால், மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களில் அரங்கேறிய போர்க்கொடிக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கனத்த இதயத்துடன் சிவசேனாவின் இரண்டரை ஆண்டு ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பபட்டுள்ளது.
மகாராஷ்டிரா ஆளுநர் நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது. சட்டசபையில் போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இரவில் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
முன்னதாக உத்தவ் தாக்கரே தனது ராஜினாமா அறிவிப்புக்கு முன்பு அமைச்சரவை கூட்டம் நடத்தினார். தனது தலைமையில் நடைபெறும் கடைசி அமைச்சரவை கூட்டம் என்பதை அறிந்திருந்த உத்தவ் தாக்கரே இந்த கூட்டத்தின் வாயிலாக 2 நகரங்களின் பெயர் மற்றும் மும்பை விமான நிலையத்தின் பெயர்கள் மாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.
அதன்படி முகலாய பேரரசர் அவுரங்கசீப் பெயரை குறிக்கும் வகையில் அவுரங்காபாத் நகரத்தை சம்பாஜி நகர் எனவும், ஐதராபாத்தின் கடைசி ஆட்சியாளரான மீர் உஸ்மான் அலி கான் பெயரில் உஸ்மானாபாத் நகரத்தை தாராஷிவ் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்தார். அதோடு நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னாள் விவசாயிகள் சங்க கட்சி தலைவர் டிபி பாட்டீல் பெயர் சூட்ட கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பெயர் மாற்றம் குறித்தும் தனது ராஜினாமா அறிவிப்பில் உத்தவ் தாக்கரே, ‛‛அவுரங்காபாத் நகரை சம்பாஜி நகர், உஸ்மானாபாத் நகரை தாராஷிவ் எனவும் பெயர் மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த 2 நகரங்களுக்கு இத்தகைய பெயரை வைக்க என் தந்தை ஆசைப்பட்டார்” என கூறினார். இதன்மூலம் உத்தவ் தாக்கரே தனது தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டு முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.