பாராகுவாட் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை கஷாயத்துடன் கலந்து கொடுப்பது எப்படி என்று கிரீஷ்மா 23 முறை எப்படி என்று இணையத்தில் தேடியது செல்போனை ஆய்வு செய்ததில் கண்டறியப்பட்டதை நீதிமன்றம் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது. கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இந்நிலையில் ஷாரோன் ராஜுக்கும், களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மா என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2022 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி ஷாரோன் ராஜீக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 2022 -ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த காதலி தங்கள் மகனுக்கு அவரது காதலி கிரீஷ்மா தான் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார் என்று ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ஷாரோன் ராஜுக்கு காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரிய வந்தது. திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரருக்கு கிரீஷ்மாவை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இந்த திருமணத்திற்கு கிரீஷ்மா முதலில் சம்மதிக்காத நிலையில் பெற்றோர் ஏதோதோ சொல்லி சம்மதிக்க வைத்தனர். ஆனால் ஷாரோன் ராஜ் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்ததால் அவரை கொலை செய்ய கிரீஷ்மா தீர்மானித்துள்ளார்.
அதன்படி கடந்த 2022 -ஆம் ஆண்டு ஷாரோன் ராஜை தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. கிரீஷ்மா தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால், ஷாரோன் ராஜ் அந்த திருமணத்தை நிறுத்த தங்களது நெருக்கமான போட்டோக்களை மாப்பிள்ளையிடம் காட்டி விடுவாரோ என்ற அச்சத்தில் திட்டமிட்டு அவரைக் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து கிரீஷ்மாவை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்தக் கொலைக்கு கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்ததை அடுத்து அவர்களையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 2 வருடங்களாக நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இறுதிக்கட்ட விசாரணை முடிந்து கடந்த 17 -ஆம் தேதி இந்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி பஷீர் அறிவித்தார். மேலும் கிரீஷ்மாவின் தாய் சிந்துவை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை அன்று தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி, குற்றவாளி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், கிரீஷ்மாவின் மாமா நிர்மலகுமாரன் நாயருக்கு 3 வருடங்கள் சிறையும் 50,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில் பல முக்கியமான தகவல்களை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதாவது, 2022 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே, ஷாரோன் ராஜை கொல்ல கிரீஷ்மா பல்வேறு திட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம், போதைப்பொருள், விஷம், மருந்து குறித்தெல்லாம் இணையத்தில் கிரீஷ்மா தேடத் தொடங்கி உள்ளார்.
ஆகஸ்ட் 22 – ஆம் 2022 தேதி அன்று, கிரீஷ்மா, அதிகப்படியான பாராசிட்டமால் மருந்தை, ஜூஸில் கலந்து “ஜூஸ் சேலஞ்ச்” நடத்தி உள்ளார். ஷாரோனிடம் ‘ஜூஸ் சேலஞ்ச்’ எனச் சொல்லி அந்த ஜூஸை குடிக்கச் செய்துள்ளார். அந்த ஜூஸை குடித்ததுமே, ஷாரோன் ராஜ் வாந்தி எடுத்தார். உடனடியாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் கிரீஷ்மா பாராசிட்டமாலை எப்படி விஷமாக பயன்படுத்தலாம், அதை எந்த ஜூஸில் கலந்து கொடுத்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்றெல்லாம், தனது போனில் இணையத்தில் தேடியது நிரூபணமாகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூஸுடன் பாராசிட்டமால் கலக்குவது எப்படி என்று கிரீஷ்மா 23 முறை தேடி உள்ளதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 14, 2022 அன்று காலை 7.26 மணிக்கு, அதாவது, ஷாரோன், கிரீஷ்மா வீட்டிற்குச் சென்ற நாள் அன்று, கிரீஷ்மா கூகுளில் பாராகுவாட் பூச்சிக்கொல்லி மருந்து பற்றியும், அதன் விஷத்தன்மை, பயன்பாடு போன்றவற்றைப் பற்றியும் அதன் விளைவு பற்றியும் நீண்ட நேரம் கூகுளில் தேடியதாக நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.