நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியை சேர்ந்த கல்யாணி என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் அரசுப்பள்ளியில் நூலகர் பணிக்கு தேர்வானதால் ஊராட்சி உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓடப்பள்ளியை சேர்ந்த தங்கராசுவின் சகோதரர் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் பெற்று ஏமாற்றியதால் மனமுடைந்த தங்கராசு, கல்யாணியின் வீட்டின் முன்பு தீக்குளித்து பரிதாபமாக உயிர் இழந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது உறவினர் மதிவதனி ஆகியோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தலா ரூ.12 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்தை பெற்றுக்கொண்டு, போலியாக பணி நியமன ஆணைகள் கல்யாணி வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெகதீஸ்வரன் மற்றும் மதிவதனி ஆகியோர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் அம்பிகாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், கல்யாணி மற்றும் அவரது அண்ணன் செந்தில்குமார் ஆகிய இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.
மேலும் சிலருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை போலியாக அச்சடித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கல்யாணி மற்றும் செந்தில்குமாரை காவல்துறை கைது செய்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.