சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.450 , ரூ.15 லட்சம் மருத்துவ காப்பீடு என பல தேர்தல் வாக்குறுதிகள். ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 13-ஆம் தேதி , நவம்பர் 20-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெற்று நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் தேர்தல் களத்தில் இந்தியா கூட்டணியாக ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் களம் காண்கின்றன. இந்த கூட்டணியின் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த தேர்தல் அறிக்கையில் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் ரூ.450-க்கு விற்பனை செய்யப்படும்; அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் 500 ஏக்கரில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்; 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்; ரூ15 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு 28% ஆக அதிகரிக்கப்படும்; தலித்துகளுக்கான இடஒதுக்கீடு 12% உயர்த்தப்படும்; இதர பிற்டுததப்பட்ட ஜாதிகளுக்கான இடஒதுக்கீடு 27% ஆக உயர்த்தப்படும்; பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும்; சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் ‘இந்தியா’ கூட்டணி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நியாய விலை கடைகளில் தற்போது வழங்கப்படும் 5 கிலோ உணவு தானியங்கள் 7 கிலோவாக அதிகரிக்கப்படும் என்பதும் இந்தியா கூட்டணியின் வாக்குறுதிகளில் ஒன்று. விவசாயிகளுக்கும் ஏராளமான வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை வாரி வழங்கி உள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச விலை ரூ2,400-ல் இருந்து ரூ3,200 ஆக உயர்த்தப்படும் எனவும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.