மாவட்ட ஆட்சியர் அதிரடி: அனுமதியின்றி செயல்பட்ட 3 காப்பகங்களுக்கு சீல்

அனுமதியின்றி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் முதியோர் காப்பகங்கள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அழியாநிலை கிராமத்தில் நமது இல்லம் அறக்கட்டளை சார்பில் செயல்பட்ட முதியோர் இல்லம் மற்றும் ஒத்தக்கடையில் புதிய நமது இல்லத்தில் ஆட்சியர் கவிதாராமு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மது இல்லம் அறக்கட்டளை மற்றும் புதிய நமது இல்லம் ஆகிய காப்பகங்கள் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து 2 காப்பகங்களுக்கும் ஆட்சியர் `சீல்’ வைக்க உத்தரவிட்டார். மேலும் அழியாநிலை முதியோர் காப்பகத்தில் தங்கி இருந்த 31 ஆண்கள், 37 பெண்கள் என 68 பேரும், ஒத்தக்டை புதிய நமது இல்லத்தில் தங்கி இருந்த 51 ஆண்கள், 8 பெண்கள் என 59 பேரும் என மொத்தம் 127 பேரையும் புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி பழைய அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கான தகுந்த சிகிச்சைகள் அளிக்க உத்தரவிட்டார்.

மேலும் கந்தர்வக்கோட்டை வட்டம், அரியானிப்பட்டியில் செயல்படுகிற ரெனிவல் பவுண்டேஷன் என்ற மனநலப் பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்தார். அப்போது இந்த காப்பகமும் உரிய அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டதால் `சீல்’ வைக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்த 105 பேரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்தார்.