கட்சிக்காக இறங்கி வந்த ஓபிஎஸ்..! சீண்டாத எடப்பாடி பழனிசாமி..!

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக ஓ பன்னீர்செல்வம் சமாதானமாக பேச முன் வந்தாலும் கூட.. எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கி வர மறுத்துள்ளது. இந்த தேர்தல் மூலம் அதிமுகவில் சமாதானம் நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் இடையிலான மோதல் இன்னும் பெரிதாகி உள்ளது.

அதிமுகவில் எப்போது என்ன பிரச்சனை வந்தாலும்.. கூடவே ஒரு இடைத்தேர்தலும் வந்துவிடும். அதாவது 2017-ல் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அதேபோல்தான் இப்போது .தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் ஜூலை 9-ந் தேதி நடக்க உள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், என்று மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் கிட்டத்தட்ட 500 பதவிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இதற்கு அவர்கள் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர். இன்று படிவம் ஏ மற்றும் பி இரண்டையும் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இன்று மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கவில்லை என்றால் வேட்பாளர்கள் அதிமுக வேட்பளார்களாக கருதப்பட மாட்டார்கள். இந்த படிவங்களில் ஓபிஎஸ், இபிஎஸ்தான் கையெழுத்து போட வேண்டும். ஆனால் எடப்பாடி தரப்போ.. ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே காலாவதியாகிவிட்டது என்று வாதம் வைத்து வருகிறது. அப்படி இருக்கும் போது.. ஓபிஎஸ் இதில் கையெழுத்து போடுவதை எடப்பாடி விரும்பவில்லை. அப்படி இருவரும் கையெழுத்து போட்டால்.. அதை நீதிமன்றத்தில் ஆதாரமாக காட்டி.. பாருங்க இன்னமும் நான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைக்கும்.

இதை தடுக்கும் விதமாக இந்த மனுக்களில் கையெழுத்து போடவே எடப்பாடி தரப்பு மறுத்து வருகிறது. இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு சின்னம் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்திலும், தான்தான் இன்னும் ஒருங்கிணைப்பாளர் என்பதை நிரூபிக்கும் வகையிலும்  இந்த மனுக்களில் கையெழுத்து போட முன் வந்தார். படிவம் ஏ மற்றும் பியில் நான் கையெழுத்து போடுகிறேன் என்று ஓபிஎஸ் இறங்கி வந்தார்.

இதில் கையெழுத்து போட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ரெடியா என்று ஓபிஎஸ் கேட்டார். அதோடு எடப்பாடிக்கு இது தொடர்பாக கடிதமும் எழுதினார். ஆனால் இந்த கடிதத்தை அவர் கையால் கூட சீண்டவில்லை. அதை தொட்டுப்பார்க்க கூட அவர் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. அப்படியே உதவியாளர் மூலமே கடிதத்தை திருப்பி அனுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அம்மாதான் பொது செயலாளர்.. ஜெயலலிதா சமாதியில் தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி..!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை பூதாகரமாக வெடிக்க, எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடையே உள்ள மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. இந்நிலையில் நாளை அதிமுக பொதுக் குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து தனித்தீர்மானம் நிறைவேற்றக் கூடும் என சொல்லப்படுகிறது.

அந்த தீர்மானத்தை வைத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்பது ஓபிஎஸ் தரப்பின் வாதமாக இருக்கிறது. அவ்வாறு புதிய பதவியை உருவாக்குவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றும் ஓபிஎஸ் தரப்பு சொல்கிறது. இதனால் ஓபிஎஸ் தரப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் இடையே மோதல் போக்கு இருநது வருகிறது.

அதிமுக பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்க மறுத்து திட்டமிட்டபடி பொதுக் குழு கூட்டத்தை நடத்தியே தீருவோம் என்கிறார்கள். இதையடுத்து ஓபிஎஸ் ஆவடி ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என கூறியே ஓபிஎஸ் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென அதிமுக தொண்டர்களில் சிலர் ஜெயலலிதா சமாதிக்கு சென்றனர். அங்கு அவரது சமாதியில் மெழுகுவர்த்தி ஏத்தி வைத்து அதிமுகவை காப்பாற்றுங்கள் என கூறி ஒப்பாரி வைத்தனர்.

பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அவரை தவிர எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கூறி அழுதனர். பின்னர் வந்திருந்த தொண்டர்களில் மண்ணெண்ணெய் கேனை திறந்து மேலே ஊற்ற முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்,இதனால் ஜெயலலிதா சமாதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓ.பன்னீர்செல்வம் ரூ.500 கோடி கிராவல் மண் எடுத்ததான புகாரில் அதிகாரிகள் மீது விசாரணை

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஞானராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், “தேனி மாவட்டத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள கிராவல் மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது என தாக்கல் செய்துள்ளார். இதற்காக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஏராளமான புகார்களை அரசுக்கு கொடுத்துள்ளேன்.

கடந்த ஆண்டு ஜூலை 21-ந்தேதி லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த அனுமதி கேட்டு ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகார் மீது விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், “இந்த குற்றச்செயலில் வருவாய் துறை, புவியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த தேனி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கிவிட்டார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் அனுமதி இன்னும் வழங்கவில்லை. அனுமதி கிடைத்ததும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி வி.பாரதிதாசன் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நிலுவையில் இருந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

எனவே, புலன் விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி கேட்டு காவல்துறை அனுப்பியுள்ள ஆவணங்களை தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் பரிசீலித்து தகுந்த உத்தரவை வருகிற பிப்ரவரி மாதம் 3-ந்தேதி அல்லது அதற்கு முன்பு பிறப்பிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கை பிப்ரவரி 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.