நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த யாருக்கேனும் அறிகுறிகள் உள்ளதா, தடுப்பூசி போட்டு உள்ளனரா என்று வீடு, வீடாக கணக்கெடுக்க எஸ்.எஸ்.எல்.சி. முதல் பட்டப்படிப்பு வரை முடித்த மொத்தம் 250 பேர் தற்காலிக சுகாதார ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அடையாள அட்டை, தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சி மீட்டர் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 9-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை என ஒரு மாதம் பணிபுரிந்தனர்.
ஆனால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி அலுவலகத்துக்கு தற்காலிக சுகாதார ஊழியர்கள் வந்தனர். பின்னர் ஒப்பந்ததாரரிடம் சம்பளம் இன்னும் வழங்கவில்லை. எப்போது வழங்கப்படும் என்று அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் சரிவர பதில் அளிக்காததால், ஒப்பந்ததாரரை தற்காலிக சுகாதார ஊழியர்கள் சிறைபிடித்தனர். அவர் காரில் ஏறி செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.