ஊட்டியில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு..!

நீலகிரி மாவட்டம், ஊட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு பஜனை சபை செயல்பட்டு வருகிறது. இங்கு கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். விழா காலங்கள் மற்றும் முக்கியமான நேரங்களில் இங்குள்ள பஜனை சபை கூடத்தில் வழிபாடு நடக்கும். இந்நிலையில் பஜனை சபை கூடத்தில் உள்ள அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஊட்டி அனந்தகிரி பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பவரது மனைவி ஸ்வீட்டி பெட்ரீசியா என்பவர் பஜனை கூடத்தின் சாவியை கடந்த 9-ந் தேதி கோகுல்ராஜிடம் வாங்கியுள்ளார்.

இதன் பின்னர் பூஜை முடிந்து சாவியை ஒப்படைத்து விட்டார். இந்நிலையில் கோகுல்ராஜ் பஜனை சபை கூடத்திற்கு சென்றபோது அம்மன் கழுத்தில் அணியப்பட்ட 4 கிராம் தங்கத்தாலியை காணவில்லை. அப்போதுதான் அவருக்கு, அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த 9-ந்தேதி அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று வந்த ஸ்வீட்டி பெட்ரீசியா தங்கத்தாலியை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காவல்துறை, ஸ்வீட்டி பெட்ரீசியாவிடம் இருந்த தங்கத்தாலியை மீட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க நீலகிரி மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தடை அமலில் இருந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கோவில்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள், தட்டுகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஆனாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திடும் வகையில் ஊட்டி நகர் நல அலுவலர் ஸ்ரீதர், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் ஆகியோர் நேற்று ஊட்டி பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றதாக 20 கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

ஊட்டியில் உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நலத்திட்ட உதவிகள் உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சியர் அம்ரித் முன்னிலை வகிக்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கி பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது கயல்விழி செல்வராஜ் பேசிய, தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 8 லட்சம் பழங்குடியினர்கள் 37 வகையான பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் இயற்கையை பாதுகாத்து, பழங்குடியினர் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கின்றனர். பழங்குடியினரின் எதிர்காலமான இளைஞர்களின் வளர்ச்சி தான் மிகவும் முக்கியம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தனிநபர் உரிமைகள் பழங்குடியினர் நலத்துறை மூலம் 320 உண்டு உறைவிடப்பள்ளிகள், 48 விடுதிகள் செயல்படுகிறது.

இதில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஏகலைவா பள்ளிகளில் 2,600 மாணவர்கள் படிக்கின்றனர். வகுப்பறை, ஆய்வகம், கழிப்பிட வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் சாதி சான்றிதழ் பிரச்சினைகளை களையவும், உண்மை தன்மையை சரிபார்க்கவும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,190 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், ஆர்.டி.ஓ. துரைசாமி, தாட்கோ தலைவர் மதிவாணன், நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார் மேலும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், தோடர் பழங்குடியின மக்கள் வாழ்ந்துவரும் பகல்கோடு மந்துக்குச் சென்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜீக்கு, பாரம்பர்ய முறைப்படி வரவேற்பு அளித்தனர் அந்த மக்கள். அவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் குறைகளைக் கேட்டறிந்தவர், அந்த இனப் பெண்களின் பூத்துக்குளி எனும் பாரம்பர்ய உடையை அணிந்து நடனம் ஆடினார். மேலும் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பர்ய உணவையும் சாப்பிட்டார்.

ஆதரவற்ற மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயற்சி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பஷீர் அகமது என்பவர் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை ஒட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் பஷீர் அகமது புதிய கட்டிடம் அருகே இருந்த நிலத்தையும் ஆக்கிரமிக்க முயன்றதாக மூதாட்டி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 22-ந் தேதி கொரோனா பாதிப்புக்கு உள்ளான போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பஷீர் அகமது ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேசமயம் அவர்மீது மூதாட்டி புகார் அளித்தது பஷீர் அகமதுவிற்கு தெரிய வந்தது. ஆத்திரம் அடைந்து பூரண குணமடைந்து வீடு திரும்பிய பஷீர் அகமது மூதாட்டியை மீண்டும் நிலத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்து உள்ளார்.

மேலும் யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி நிலத்தை அபகரிக்க முயன்றது குறித்து மீண்டும் புகார் எழுந்துள்ளது. அதன் பேரில் நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்த அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தியதில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பஷீர் அகமது நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் மூதாட்டியை மிரட்டியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பஷீர் அகமதுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஊட்டி காந்தல் பகுதி கல்லறை தோட்டத்தில் இறந்தவர்களுக்கு பிடித்த உணவுகளை கல்லறை மேல் வைத்து பிரார்த்தனை

உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி இறந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் விதமாக கல்லறை திருநாளாக அனுசரித்து வருவது வழக்கம்.

இந்நிலையில் உலகம் முழுவதும் கல்லறை திருநாளாக அனுசரித்து வரும் நிலையில், ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது இறந்த உறவினர்கள் மற்றும் முன்னோர்களது கல்லறைகளுக்கு சென்று, அங்கு இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையில் மலர்கள், மெழுகுவர்த்திகள் வைத்து அலங்கரித்து, இறந்தவர்களுக்கு பிடித்த உணவுகளை கல்லறை மேல் வைத்து பிரார்த்தனை செய்தனர்.