4 போலி நிறுவனங்களைத் தொடங்கி ஆன்லைன் டிரேடிங்கில் 22 ஆயிரம் கோடி மோசடி..!

ஆன்லைன் டிரேடிங், கிரிப்டோகரன்சி வர்த்தகம் மூலம் லட்சக்கணக்கில் லாபம் பெறலாம், சம்பாதிக்கலாம், இரட்டிப்பு லாபம் பெறலாம். வட்டிக்கு வட்டியும் கிடைக்கும், குறைந்த காலத்தில் முதலீடும் இரட்டிப்பு ஆகும் என்று ஆசைவார்த்தை கூறி சமூக வலைதளங்களைத் திறந்தாலே பங்கு வர்த்தகம் தொடர்பான விளம்பரங்களும், போஸ்டுகளுமே கண்ணில் படும்.

சமீபகாலமாக நாளுக்கு நாள் ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயனர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களது வாட்ஸ் அப் எண்ணுக்கு முதலீடு தொடர்பான ஆலோசனைகளை அளிக்கிறோம் என்று தொடர்ச்சியாக குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளை மேற்கொள்கின்றனர்.

இதன் மூலமாக சிக்குபவர்களிடம் பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அசாமில் இதேபோல ஒரு மிகப்பெரிய மோசடி சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக திப்ருகர் பகுதியைச் சேர்ந்த விஷால், கவுஹாத்தியைச் சேர்ந்த ஸ்வப்னில் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களது வீட்டில் காவல்துறை ரெய்டு நடத்தினர். அந்த ரெய்டில் பல கோடி ரூபாய்க்கும் மேல் பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு பேரும் 4 போலி நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலம் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.