கோயம்புத்தூர் சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகரை சேர்ந்த ஸ்ரீமுருகன், இவரது மனைவி பிரியாலட்சுமி சமீபத்தில் இவரது செல்போனில் உள்ள டெலிகிராம் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதில் இருந்த லிங்க்-ஐ கிளிக் செய்து பிரியாலட்சுமி தனது விவரங்களை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை திரிஷா என அறிமுகப்படுத்தி கொண்டார்.
அவர் ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளது எனவும், அந்த கம்பெனி இணையதளத்திற்கு சென்று ரிவ்யூ கொடுத்தால் அதிகளவு கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். மேலும் தாங்கள் கொடுக்கும் பணிகளை ஆன்லைனில் முடித்து கொடுத்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்தார். திரிஷா கூறியதை நம்பிய பிரியாலட்சுமி ஆன்லைன் மூலம் அவர்கள் கொடுத்த பணிகளை முடித்து கொடுத்தார்.
இதையடுத்து அவருக்கு கமிஷனாக ரூ.1,500 கிடைத்தது. இதையடுத்து மீண்டும் பிரியாலட்சுமியை தொடர்பு கொண்ட, திரிஷா தாங்கள் கூறும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி, ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்தால் கூடுதல் கமிஷன் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் கூறிய வங்கி கணக்கிற்கு பிரியாலட்சுமி ரூ.10 ஆயிரம் முதலீடாக செலுத்தினார். இதற்கு பிரியாலட்சுமிக்கு ரூ.13,407 கமிஷனாக கிடைத்தது. மற்றொரு பணிக்கு ரூ.11,706 கமிஷனாக கிடைத்தது. இதையடுத்து பிரீமியம் முறையில் பணம் செலுத்தினால் இதை விட அதிக கமிஷன் தொகை கிடைக்கும் என்று பிரியாலட்சுமிக்கு அந்த மர்ம பெண் திரிஷா ஆசை வார்த்தை கூறினார்.
இதனை நம்பிய பிரியாலட்சுமி, பல்வேறு கட்டங்களாக திரிஷா கூறிய வங்கி கணக்கு எண்ணிற்கு ரூ.7 லட்சத்து 61 ஆயிரம் பணத்தை செலுத்தினார். அதன்பின்னர் பிரியாலட்சுமி கமிஷன் தொகை கிடைக்கவில்லை. மேலும் திரிஷாவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாலட்சுமி இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.