கல்லூரி மாணவன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி ரூ 2.40 கோடி கடன்…! சொத்துக்கள் முழுவதும் விற்றும் கடனை அடைக்க முடியாததால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை..!

இந்தியாவிலும் உலகெங்கிலும் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங்கின் வருவாயை உருவாக்குவதற்கும் வேலைகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் அதே வேளையில், பணமோசடி, மேட்ச் பிக்ஸிங் போன்ற பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான வழிகளையும் செய்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடெங்கும் ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. ஆனால் மகன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி ரூ. 2.40 கோடி கடன் ஏற்பட்டு, அவற்றை சொத்துக்கள் விற்றும் அடைக்க முடியாததால் பெற்றோர் விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் வேலுகோடு மண்டலம் அப்துல்லாபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரரெட்டி. இவரது மனைவி பிரசாந்தி. இவர்களது ஒரே மகன் நிகில் ரெட்டி. பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படிக்க பெற்றோர்கள் சேர்த்தனர். ஒரே மகனை படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் கனவு கண்டனர். இதற்காக மகன் எப்போது பணம் கேட்டாலும் கொடுத்தனர். அந்த பணத்தை வைத்து நிகில் ரெட்டி ஆன்லைன் சூதாட்டத்துக்கு பழகிவிட்டார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்த நிலையில் ரூ.2.40 கோடி வரை கடன் ஏற்பட்டது. இதை அறிந்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சொத்து முழுவதையும் விற்றாவது கடனை அடைக்காவிட்டால் குடும்பத்தின் நற்பெயர் போய்விடும் என கடன்களை அடைக்க அப்துல்லாபுரத்தில் உள்ள பத்து ஏக்கர் நிலம், வீடு, விவசாய நிலம் ஆகியவற்றை மகேஸ்வர ரெட்டி தம்பதியினர் விற்றனர். ஆனாலும் கடன்கள் தீர்க்கப்படவில்லை.

மீதி கடனை அடைக்க கடன் கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்ததால் மாமியார் வீட்டில் கொடுத்த மூன்று ஏக்கர் நிலத்தையும் விற்க முடிவு செய்தனர். ஆனால் குறைவான விலைக்கு கேட்பதால் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மனமுடைந்த மகேஸ்வர ரெட்டி மற்றும் பிரசாந்தி தம்பதியினர் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு அப்துல்லாபுரம் அருகே உள்ள தங்களது விவசாய நிலத்திற்கு சென்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

மறுநாள் 14-ஆம் தேதி காலை அந்த வழியாகச் சென்ற விவசாயிகள் நிலத்தில் தம்பதி இறந்து கிடப்பதை பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து ஆத்மகுரு டிஎஸ்பி ராமாஜிநாயக் தலைமையில் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இருவரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஆத்மகுரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்: பாசமான மகனை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை..!

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பெண்டியாலா கிருஷ்ண சைதன்யா. இவருக்கு வைதேகி என்ற மனைவி, பத்ரி, கௌஷிக் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் தாம்பரம் அடுத்து மாடம்பாக்கம், பார்வதி நகர் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சமையல்காரராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், சைதன்யா ஆன்லைன் சூதாட்டம் ஆடுவதற்கு பலரிடம் பல லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் கடன் தொல்லையில் அவதிப்பட்டு வந்த சைதன்யா கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார். பின்னர் மருத்துவ விடுப்பு எடுத்து தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று கடந்த ஓராண்டாக வசித்து வந்ததாகவும், சிறிய அளவில் கடனை அடைத்த பின்னர் மீண்டும் கடந்த மாதம் 20-ம் தேதி குடும்பத்துடன் மாடம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு தொல்லை செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சைதன்யா நேற்று அதிகாலை குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மூத்த மகன் பத்ரியை மட்டும் வீட்டில் உள்ள மற்றொரு படுக்கை அறைக்கு அழைத்து சென்று அவனை புடவையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர், அதே புடவையில் அவனை தூக்கில் தொங்க வைத்துவிட்டு, வாட்ஸ்- அப் குழுவில் தன் மகனை கொலை செய்து விட்டதாகவும், இந்த தகவல் வீட்டில் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவி மற்றும் மற்றொரு மகனுக்கு தெரியாது. தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் பதிவு செய்துள்ளார்.

உடனடியாக அவரது நண்பர்கள் அங்கு சென்று பார்த்தபோது மகன் பத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், காவல்துறை சைதன்யாவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். அப்போது சென்னை மெரினா கடற்கரையில் ரோந்து பணியில் இருந்த காவல்துறை அந்த செல்போனில் பேசி, அதிகாலையில் மெரினா கடற்கரைக்கு வந்து கடலில் விழுந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர், சேலையூர் காவல்துறைக்கு இதுகுறித்து ரோந்து காவல்துறை தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மெரினா கடற்கரைக்கு விரைந்த காவல்துறை, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தில் பங்கேற்று பல லட்சம் ரூபாய் இழந்ததாகவும், சூதாட்டத்திற்கு பணம் தேவை என்பதால் மாமியார் வீட்டு சொத்து, தனது பெற்றோரின் சொத்து என அனைத்தையும் அழித்து விட்டதாகவும், எனது வலி எனக்கு தான் தெரியும் என்று மட்டுமே தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தியதில், விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக வேலை செய்வதன் மூலம் 42 ஆயிரம் சம்பளம் கிடைப்பதாகவும், சூதாட்டத்திற்கு பயன்படுத்த பலரிடம் லட்சக்கணக்கில் கடன் பெற்றதால் கடன் தொகை மட்டும் மாதம் ரூ.50 ஆயிரம் செலுத்தும் நிலை இருந்ததால் தற்கொலை செய்ய திட்டமிட்டதாகவும், மூத்த மகன் பத்ரி மிகவும் பிடித்தவன் என்பதால் அவனையும் தன்னுடன் அழைத்துச் செல்ல திட்டமிட்டதும், நான் தற்கொலை செய்து கொண்டால் தனது வேலை மனைவிக்கு கிடைக்கும் எனவும் அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் மாதம் ரூ.42 ஆயிரத்தை வைத்து மனைவி இளைய மகனை பார்த்துக் கொள்வார் எனவும் திட்டமிட்டு மகனை கொலை செய்து பின்னர் தானும் தற்கொலைக்கு முயற்சித்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறை அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு வாதம்: ரூ.2,000 கோடி வருவாய் ஈட்டும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள்…!

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார் அவர் வாதாடியதாவது: இந்த வழக்கை ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் தொடரவில்லை. மாறாக, அந்த சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் ஆன்லைன் நிறுவனங்கள்தான் தொடர்ந்துள்ளன. கிளப்களுக்கு வெளியே ரம்மி விளையாடுவதற்கு தடை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஆன்லைனில் 24 மணி நேரமும் ரம்மி விளையாட முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் விளையாடக் கூடாது என எந்த நேரக்கட்டுப்பாடும் விதிக்க முடியாது. இதை முறைப்படுத்தவும் இயலாது. ரூ.5 ஆயிரம் செலுத்தி விளையாடினால் ரூ. 5,250 வழங்குகின்றனர். இது நேரடியாக விளையாடும்போது நடக்காது. ஒரு நண்பரை சேர்த்துவிட்டால் ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்குகின்றனர். இதேபோல வேறு ஏதேனும் திறமையான விளையாட்டுகளுக்கு வழங்குகிறார்களா என்றால் இல்லை.

போனஸ் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து வருகின்றன. வழக்கமான ரம்மி விளையாட்டைவிட இது முழுக்க, முழுக்க மோசமானது என்பதால்தான், இந்த சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு தடை சட்டம் கொண்டு வந்துள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை அனுமதித்தால், இதேநடைமுறை எல்லா விளையாட்டுகளிலும் புகுந்துவிடும். மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி, பொது ஒழுங்கைப் பாதித்து விடும் என்பதாலும், சிறுவர்களின் நலனைக் கருத்தில்கொண்டும் ஆன்லைன் ரம்மிபோன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து சட்டம் இயற்ற, தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.

இது திறமைக்கான விளையாட்டு அல்ல. ஆன்லைன் நிறுவனங்கள் மக்களை சுரண்டி சூதாட்டத்தில் ஈடுபடுவது என்பது அடிப்படை உரிமையல்ல என்பதால், இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 17-ம்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.