ரூ.15 லட்சம் பறிக்க முயற்சி காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பெரும்பாலை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த பழனி நிதி நிறுவன நடத்தி வருக்கிறார். பழனி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இனிப்பு, காரம், பட்டாசு மற்றும் ஒரு பவுன் தங்க நாணயம் தருவதாக கூறி ஒவ்வொரு மாதமும் பணம் வசூல் செய்து வந்தார். இதற்கிடையே பழனியை தொடர்பு கொண்ட சேலத்தை சேர்ந்த சிலர், ஒரு பவுனுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை குறைத்து தங்க நாணயம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.

இதனை நம்பி பழனி, தன்னுடைய நண்பனை அழைத்துக்கொண்டு சேலத்துக்கு புறப்பட்டார். மேலும் தங்க நாணயங்கள் வாங்குவதற்காக ரூ.15 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு காரில் சேலத்துக்கு வந்தார். பழனி சேலத்துக்கு வந்தபோது, பழனியை தொடர்பு கொண்ட அந்த கும்பல் ஓமலூர் அருகே ஆர்.சி. செட்டிப்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள தனியார் உணவு விடுதிக்கு அருகில் வரும்படி கூற பழனியும், அவருடைய நண்பரும் ஆர்.சி. செட்டிப்பட்டி அருகில் வந்தபோது அவர்களை 6 பேர் கும்பல் தங்களை ஆய்வாளர் என்றும், உதவி-ஆய்வாளர் என்றும் கூறி வழிமறித்தது விசாரணைக்கு காவல் நிலையம் வரும்படியும் அவர்களை அழைத்துள்ளது.

இதில் சந்தேகம் அடைந்த பழனியும், நண்பரும் அவர்களிடம் வாக்குவாதம் செய்யவே அங்கிருந்து அவர்கள் ரூ.15 லட்சத்துடன் தப்பி ஓட்டம் பிடித்தனர். அந்த அவர்களில் கும்பலில் ஒருவரை பிடித்து ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா விசாரணை நடத்தியதில், அவர் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த உதயசங்கர் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய மேல் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

சேலம் அம்மாபேட்டை காமராஜர் நகரை சேர்ந்த பெரியசாமி என்பவர் முதலில் பழனியை தொடர்பு கொண்டு குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாக கூறியுள்ளார். அதன்பிறகு பெரியசாமியின் மகன் ஜெகன், அவருடைய மருமகன் சங்ககிரியை சேர்ந்த பரணிதரன், மணக்காடு வக்கீல் விஜயகுமார், கொண்டலாம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கும்பலாக இந்த துணிகர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

தற்போது கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதால் சரவணன் இந்த மோசடி கும்பலுடன் சேர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறப்பு உதவி ஆய்வாளரே இந்த செயலில் ஈடுபட்டு்ள்ளது பொதுமக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.