இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் ஜாதி சண்டை, மத சண்டைகள் நாடெங்கும் அரங்கேறும் நிலையில், கோயம்புத்தூர் பீளமேடு காந்தி நகரைச் சேர்ந்த பிரலோப், இவரது மனைவி பீனா ப்ரீத்தி. இவர்களது மகள் ஹாதியா. இந்த குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை என குறிப்பிடும் வகையில் சான்றிதழ் வாங்க வேண்டும் என பெற்றோர் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் கோயம்புத்தூர் வடக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். விண்ணப்பத்தை பரிசீலித்த அதிகாரிகள் நேற்று பிரலோப்- ப்ரீத்தி தம்பதியின் குழந்தை ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை வழங்கினர்.
அதில் ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹாதியாவின் பெற்றோர் கூறுகையில், எல்லோரும் இந்தியர்கள் என்ற மனநிலை மட்டும் இருந்தாலே போதும். எங்கள் மகளை ஜாதி, மதம் என்ற வட்டத்தில் வைத்து அவளை பிரிக்க வேண்டாம் என முடிவு செய்தோம். இப்படி சான்று பெற்றால் எதிர்காலத்தில் எங்கள் குழந்தைக்கு ஜாதி ரீதியில கிடைக்கும் எந்த ஒரு சலுகையும் கிடைக்காது என்பது எங்களுக்கு தெரியும்.
அதெல்லாம் வேண்டாம் என்று தெரிந்துதான் ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை எங்கள் குழந்தைக்கு பெற்றோம். அந்த சான்றிதழை பெறுவதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் இதை ஏன் வாங்குகிறீர்கள் என கேட்டனர். அவர்களுக்கு இது போல் சான்று அளிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றே தெரிகிறது.
தமிழக அரசு ஏற்கெனவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் போது பெற்றோர் விரும்பினால் மாற்று சான்றிதழில் ஜாதி, மதமில்லை என குறிப்பிடலாம். இல்லாவிட்டால் அந்த கேள்விகளுக்கு எதையும் ஃபில்லப் செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம். எங்களை போல் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி, மதம் இல்லாத சான்று பெற விரும்புகிறார்கள்.
ஆனால் எப்படி விண்ணப்பிப்பது என தெரியாமல் இருக்கிறார்கள். எனவே ஜாதி சான்று வாங்குவதற்கு தகவல்களை அரசாங்கம் கொடுப்பது போல் ஜாதி சான்று வேண்டாம் என்பதற்கும் அரசாங்கம் வழிகாட்ட வேண்டும் என அந்த தம்பதி தெரிவித்தனர். கடந்த 2013 -ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ள கடிதத்தில் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் அந்த மாணவனின் பள்ளிச் சான்று, பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதியில்லை, மதமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ விரும்பினால், சம்பந்தப்பட்டவரின் விருப்பக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.