மாநகராட்சி அதிகாரி வீட்டில் குவியல் குவியலாக பணம்..!

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதரபாத், வாரங்கல்லுக்கு அடுத்தபடி நிஜாமாபாத் மாநகராட்சி மூன்றாவது பெரிய நகரமாகும். இந்நிலையில், நிஜாமாபாத்தில் பொறுப்பு வருவாய் அதிகாரியாக தாசரி நரேந்தர் என்பவர் பதவி வகிக்கிறார். இவர் பல ஆண்டுகளாக ஒரே பதவியில் அப்படியே தொடர்ந்து வந்தார். உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை பலரையும் சரிக்கட்டிய தாசரி நரேந்தர், அவர்களிடம் தனக்கு உள்ள செல்வாக்கால் அங்கிருந்து பணியிடமாற்றமே இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

அதேபோல் தன்னை பற்றி யாருக்கும் பெரிதாக எதுவும் தெரியக்கூடாது என்பதிலும் மிக கவனமாக இருந்துள்ளார். இதனால் இவர் கோடிக்கணக்கில் சொத்து வாங்கி குவித்த போதும், எதையும் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது. நிஜாமாபாத் மாநகராட்சியில் வேலை செய்யும் அதிகாரிகளும், கவுன்சிலர்களுமே தாசரி நரேந்தரை வெகுவாக ஆதரித்தும் வந்துள்ளார்கள்.

இந்நிலையில் தாசரி நரேந்தர், மாநகராட்சியில் சொத்து வரியை மிரட்டி வசூலிக்கவும் அனுமதித்துள்ளார். அதற்காக சில பரிசுகளும் வாங்கியுள்ளார். இவர் வீட்டுக்கு கூட செல்லாமல் பல நாட்கள் மாநகராட்சியே கெதி என இருந்துள்ளார்.

இந்நிலையில், ஹைதரபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு இடமாற்றமே இல்லாமல் இவர் ஒரே இடத்தில் பணிபுரிவதை கண்டு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து நிஜாமாபாத் மாநகராட்சி வருவாய் அதிகாரி தாசரி நரேந்தருக்கு சொந்தமான வீடு மற்றும் பிற இடங்களில் ஒரே நேரத்தில் வெள்ளிக்கிழமை அன்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். தொடர் சோதனைக்குப் பிறகு அம்மாநில லஞ்ச ஒழிப்பு காவல் துறை அவரைக் கைது செய்தனர்.

நரேந்தர் தனது வங்கி கணக்கில் பணம் இருந்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து உறவினர்கள் கணக்கிலேயே சொத்துக்களை வாங்கி உள்ளார். மேலும், வாங்கிய லஞ்ச பணத்தை. வீட்டில் படுக்கைக்கு அடியில் அட்டைப்பெட்டியில் கட்டுக்கட்டாக வைத்திருக்கிறார். அள்ள அள்ள வந்து கொண்டே இருந்த நிலையில், இரண்டு கோடியே 93 லட்ச ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மறுபுறம், நரேந்தரின் மனைவி மற்றும் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான 51 டோலா தங்கம் மற்றும் 17 அசையா சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒட்டுமொத்தமாக அவரது வீடு மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.93 கோடி ரொக்கம், வங்கியில் ரூ.1.1 கோடி, 51 துலா தங்கம், ரூ.1.98 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளிட்ட ரூ.6.7 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.