நெய்வேலி NLC ஒப்பந்த தொழிலாளர்கள் கைது..!

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்க சென்னையை நோக்கி புறப்பட்ட NLC ஒப்பந்த தொழிலாளர்களை காவல்துறை கைது செய்து தனியார் மண்பத்தில் தங்க வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் NLC நிறுவனத்தில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் பலர் NLC நிறுவனத்துக்காக வீடு, நிலங்களை கொடுத்து சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் NLC நிறுவனம் இதுவரை ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. வாரிசு அடிப்படையிலும் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கும், கரோனா காலகட்டத்தில் உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கும் தற்பொழுது வரை பணி வழங்கவில்லை. 20 சதவீத போனஸ் வழங்கப்படவில்லை.

மேலும், இதுதொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை தொடர் போராட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டும் கோரிக்கைகளை என்எல்சி நிறுவனம் ஏற்கவில்லை. இந்நிலையில், 12-ஆம் தேதி அன்று பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பயணம் செய்து தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதன்படி இன்று காலை நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் வேன் மற்றும் பேருந்துகளில் சென்னைக்கு புறப்படவிருந்த 100-க்கும் மேற்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை காவல்துறை கைது செய்து NLC ஆர்ச் கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட NLC ஒப்பந்த தொழிலாளர்கள் திருமண மண்டப வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கைது செய்ததை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல பண்ருட்டியில் இருந்து ரயிலில் புறப்படவிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 20 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.

நெய்வேலியில் என்எல்சியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் தொற்று நோய்க்கான பரிசோதனை..!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் தொற்று நோய்க்கான பரிசோதனை திட்டம் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் கலந்துகொண்டு முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மருத்துவம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் தொற்று நோய்க்கான பரிசோதனை துவக்க விழா நெய்வேலி வட்டம் 24 பகுதியில் உள்ள என்எல்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

பின்னர் தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளை பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் மருத்துவத்துறையில் தமிழகம் சிறந்து விளங்கதாகவும், சுகாதாரத்துறை மூலம் இல்லம் தேடி மருத்துவம் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்துவதாகவும் கூறினார் முகாமில் நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எடை, உயரம், ரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைக்ள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கீதா ராணி . என்எல்சி தலைவர் பிரசன்னா குமார் மோட்டுபள்ளி , நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் , விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை: எடப்பாடி உதவியாளர் மீது வழக்கு: தோண்ட தோண்ட பல்வேறு முறைகேடுகள்

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற என்ஜினீயர் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த மணி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்து வருகிறார்.

நண்பர் ஒருவர் மூலம் மணி எனக்கு அறிமுகமானார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரை அணுகி அரசு வேலை வாங்கி தரும்படி கூறினேன். அப்போது அவர் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி அவரிடம் ரூ.17 லட்சம் கொடுத்தேன். பணம் பெற்று வருடக்கணக்கில் ஆகியும் அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரிடம் அரசு வேலை வேண்டாம். கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன்.

ஆனால் அவர் கொடுக்க மறுத்து வருகிறார். மேலும் அவர் மிரட்டல் விடுக்கிறார். எனவே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்து ஏமாற்றிய மணி மற்றும் புரோக்கராக செயல்பட்ட அவரது கூட்டாளி செல்வகுமார் ஆகிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து குற்றப்பிரிவு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி, புரோக்கராக செயல்பட்ட செல்வகுமார் ஆகியோர் பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மணி மற்றும் செல்வகுமார் ஆகிய 2 பேர் மீது மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் மணி மற்றும் செல்வகுமார் ஆகிய 2 பேரையும் காவல்துறை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.இதில், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த 25 பேரிடம் ரூ.1 கோடியே 17 லட்சம் பெற்று, மோசடி செய்த மணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிலர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவிடம் புகார் கொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.