பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் உட்கார நாற்காலி தர மறுப்பு..! அன்று கொடியேற்றும் உரிமை பறிப்பு..!

மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகின்றது. மோகன் யாதவ் பதவியேற்று ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் இங்கு பல மதவாத, சாதியவாத சிக்கல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு, உயர்கல்வி பாடதிட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் புத்தகங்களை இடம்பெற வைத்து மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டது.

மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு அடக்குமுறைவாத எண்ணங்கள் பரப்பப்பட்டு, பல வகையில் சிறுபான்மையினர் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவ்வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரும், வகுப்புவாத நடவடிக்கையால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார். அதன் வெளிப்பாடாக, ஊராட்சி தலைவராக பதவி வகித்திருக்கும் நிலையிலும், அவர் பட்டியலின பெண் என்ற காரணத்தால், ஊராட்சி அலுவலகத்தில் உட்கார நாற்காலி தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், நாற்காலியில் உட்கார விரும்பினார் வீட்டிலிருந்து நாற்காலி கொண்டு வரும்படியும், இல்லையென்றால் தரையில் உட்காரும் படியும் தெரிவித்துள்ளனர், இதர அலுவலகர்கள். இதே பெண்ணிற்கு, விடுதலை நாள் அன்று கொடியேற்றும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை சுட்டிக்காட்டி, தனது X தளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சி, “இது போன்ற சமூகநீதிக்கு எதிரான எண்ணத்தை தூக்கிப்பிடிக்கிற தன்மைக்கு எதிராக உடனடி நடவடிக்கை வேண்டும். மோடி ஆட்சியில் நீடிக்கிற Anti-Dalit மனப்பான்மை அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான உரிமை காக்கப்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளது.

மத்தியபிரதேச முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியிடம் அத்துமீறிய பாஜக பிரமுகர் கைது..!

மத்தியபிரதேச மாநில பாஜக முதலமைச்சர் மோகன்யாதவின் தலைமை செயலக சிறப்பு பணி அதிகாரி லோகேஷ் சர்மா. இவர் அடல் பிஹாரி வாஜ்பாய் நல்லாட்சி மற்றும் கொள்கை பகுப்பாய்வு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார். இவரிடம் மத்தியபிரதேச மாநில பாஜக செயற்குழு உறுப்பினர் ஹிரேந்திர பகதூர் சிங் கடந்த சனிக்கிழமை மாநில அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவன விழாவில் லோகேஷ் சர்மா பங்கேற்ற போது அவரது மகளின் வேலை தொடர்பாக கோரிக்கை வைத்தார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் உருவான மன உளைச்சல் காரணமாக ஹிரேந்திர பகதூர் சிங் அவதூறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லோகேஷ் சர்மா சார்பில் நைப் தாசில்தார் நிமேஷ் பாண்டே என்பவர் கமலாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் ஹிரேந்திர பகதூர் சிங் கைது செய்யப்பட்டார் என தெரிய வருகிறது.