“ரெடிட்” செயலி மூலம் போதைப்பொருட்கள் விற்பனை..! காட்டாங்குளத்தூரிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது..!

தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களிடையே “ரெடிட்” என்ற செல்போன் செயலி மூலம் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 5 மாணவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சா, 94 எல்எஸ்டி ஸ்டாம்புகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைபொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி காவல் ஆணையர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் போதைப்பொருள் சிறப்பு பிரிவுக்கு ஜே.ஜே.நகர் பகுதியில், மாணவர்களிடையே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படையினர் கடந்த 3-ஆம் தேதி மாலை ஜே.ஜே.நகர் பகுதியில், 21 வயது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் சுற்றியதை கண்டனர்.

அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவரது பையில் 17 எல்எஸ்டி போதை ஸ்டாம்புகள், 3 கிராம் ஓ.ஜி கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே அந்த வாலிபரை பிடித்து ஜே.ஜே.நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்றும், இவர் வண்டலூர் அருகே உள்ள பிரபல தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது.

இவர் தனது நண்பர்களான காட்டாங்குளத்தூரில் உள்ள SRM தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களிடம் இருந்து மொத்தமாக வாங்கி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் அளித்த தகவலின்படி தனிப்படையினர் SRM தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் மந்தவெளியை சேர்ந்த அரவிந்த் பாலாஜி, கூடுவாஞ்சேரியை சேர்ந்த வத்சல், மறைமலைநகரை சேர்ந்த ஆருணி, திரிசண் சம்பத் ஆகியோர் தங்கியுள்ள இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் அந்த SRM கல்லூரியில் படித்து வரும் 4 பேர், அவர்கள் தங்கும் அறையில் பதுக்கி வைத்திருந்த 94 எல்எஸ்டி போதை ஸ்டாம்புகள், 48 போதை மாத்திரைகள், 700 கிராம் உயர் ரக கஞ்சா, 5 செல்போன்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட 5 மாணவர்கள் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் படிக்கும் காட்டாங்குளத்தூரில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் உடன் படிக்கும் சக மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதற்காக “ரெடிட்” எனும் செல்போன் செயலியை பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் 5 பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர். இதையடுந்து இந்த செயலி மூலம் யார், யாருக்கு போதைப்பொருட்களை விற்றுள்ளனர் என்று காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.