கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழிவாங்கும் அரசியல் செய்யாது, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றும்

அடுத்த ஆண்டு கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் நேற்று முதல் 3 நாள் பயணம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவாவில் பழம்பெரும் நடிகை நபிஷா அலி மற்றும் இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஷும் மம்தா பானர்ஜி முன்னிலையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைத்தனர்.

இதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, நான் கோவாவுக்கு வருகிற வேளையில் எனது சுவரொட்டிகளை அவர்கள் சிதைக்கிறார்கள். நீங்கள் இந்தியாவில் இருந்து சிதைக்கப்படுவீர்கள். கருப்பு கொடி காட்டுகிறீர்கள். நிகழ்ச்சி நடத்த அனுமதி தர மறுக்கிறீர்கள். ஏனென்றால், திரிணாமுல் காங்கிரஸ் ஒருபோதும் சமசரம் செய்து கொள்ளாது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழிவாங்கும் அரசியல் செய்யாது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றும். அதைச்செய்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன். நான் கோவாவின் முதலமைச்சர் ஆக மாட்டேன். ஆனால் அரசில் கொள்கை, செயல்படும்முறை இருப்பதோடு, ஊழல் இல்லாமல் பார்த்துக்கொள்வேன்.

திரிணாமுல் காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. அது எங்கு வேண்டுமானாலும் போக முடியும். கோவாவுக்கு நாங்கள் வலுவான முறையில் பணியாற்றுவோம். நாங்கள் ஓட்டுகளை பிரிக்க விரும்பவில்லை. எல்லா கட்சிகளுக்கும் நீங்கள் ஆளுகிற வாய்ப்பை தந்திருக்கிறீர்கள். இப்போது எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். பா.ஜ.க. என்னை இந்து விரோதி என்று சொல்கிறது. ஆனால் எனக்கு நடத்தை சான்றிதழ் வழங்க அவர்கள் யாருமில்லை.

முதலில் அவர்கள் தங்கள் சொந்த நடத்தை சான்றிதழை தீர்மானிக்கட்டும். எங்கள் கட்சி பெயரான டி.எம்.சி.யில் டி- டெம்பிள், எம்- மாஸ்க், சி-சர்ச் ஆகும். இந்துக்களாக, முஸ்லிம்களாக, கிறிஸ்தவர்களாக மக்கள் என்ன மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மதத்தின் அடிப்படையில் அவர்களை பிளவுபடுத்தாது. நாங்கள் மக்களை ஒன்றுபடுத்துகிறோம் என தெரிவித்தார்.