அரியலூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை அமைச்சர் KN. நேரு ஆய்வு

அரியலூரில் புதிதாக ரூ 11.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் KN. நேரு ஆய்வு செய்தார். அரியலூரில் சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தற்போதைய பேருந்து நிலையத்திற்குப் பதிலாக அரியலூர் நகராட்சியால் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் இந்தத் திட்டத்திற்காக ₹7.80 கோடியை ஒதுக்கியது.

திட்டத்தின் முதல் கட்டமாக 21 பேருந்து நிறுத்துமிடங்கள், 30 கடைகள், ஒரு நிர்வாக அறை, ஒரு உணவகம், நேரக் கட்டுப்பாட்டு அலுவலகம், டிக்கெட் முன்பதிவு கவுண்டர், ஒரு தானியங்கி பணம் செலுத்தும் இயந்திர அறை மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டன. இரண்டாம் கட்டத்தில், மூலதன மானியத்தின் கீழ் ஆறு பேருந்து நிறுத்துமிடங்கள், 15 கடைகள், ஒரு நர்சிங் அறை மற்றும் கழிப்பறைகள் கட்ட ₹3.78 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், அரியலூரில் புதிதாக ரூ 11.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் KN. நேரு, போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் S. S. சிவசங்கருடன் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், மேலும் மேற்கொள்ளப்பட வேண்டி ய பணிகளின் விபரம் குறித்தும் அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்க.சொ.க. கண்ணன், அரியலூர் நகராட்சி ஆணையர் (பொ) அசோக்குமார், நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்திக், அரசு அலுவலர்கள், மாநில திமுக சட்டதிட்ட திருத்தக் குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர்,  நகர பொருளாளர் மா. இராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.