பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக மத ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். கேரளா மாநிலம் கொச்சியிலுள்ள தெற்கு கடற்படை தலைமையகத்தில் அதிகாரியாக இருந்த வினய் நர்வாலும், ஹிமான்ஷி நர்வாலும் ஏப்ரல் 16 அன்று திருமணம் நடைபெற்றது.
நர்வாலும் ஹிமான்ஷியும் தங்கள் தேனிலவை ஐரோப்பாவில் கொண்டாட திட்டமிட்டு இருந்த நிலையில் விசா பிரச்சினைகள் காரணமாக அது பின்னர் கைவிடப்பட்டது. திருமண கொண்டாட்டங்களுக்குப் பிறகு, புதுமணத் தம்பதிகள் கடந்த 19 -ஆம் தேதி காஷ்மீருக்குப் புறப்பட்டனர். பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தேனிலவு கொண்டாட்டத்தின் போது, ஏப்ரல் 22 -ஆம் தேதி, வினய் நர்வாலின்,ஹிமான்ஷி நர்வால் கண் முன்னே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பைசரன் புல்வெளியில் இறந்து கிடந்த தனது கணவரின் அருகில் உதவியற்ற நிலையில் அமர்ந்திருக்கும் ஹிமான்ஷி நர்வால் புகைப்படம் காண்போரின் மனதை சுக்கு நூறாக உடைத்தது.
இந்நிலையில், அரியானாவில் கர்னாலில் வினய் நர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த இரத்த தான முகாமில் ஹிமான்ஷி நர்வால்,கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அவர் எங்கிருந்தாலும், அவர் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் விரும்பும் ஒரே விஷயம் அதுதான். இன்னொரு விஷயத்தையும் நான் சொல்ல விரும்புகிறேன்.
யாரிடமும் வெறுப்பு இருக்கக்கூடாது. முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பைக் கக்குவதை நான் காண்கிறேன். நாங்கள் இதை விரும்பவில்லை. நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம். அதேநேரம் நீதியையும் விரும்புகிறோம்” என ஹிமான்ஷி நர்வால் தெரிவித்தார்.