பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு மீண்டும் தொடக்கம்

தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் கோவிலில் உள்ள தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்துகொள்ளும் பக்தர்களும், தங்களது குழந்தைகள், நோய்நொடி இன்றி வாழ தங்க தொட்டிலில் இட்டு நேர்த்திக்கடன் செலுத்த ரூ.300 ஆகியவற்றில் கட்டணம் செலுத்தி கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் உலகையே அச்சுறுத்திய கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 15-ந்தேதி முதல் அனைத்து நாட்களிலும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு, காலபூஜை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது.

6 மாதங்களுக்கு பிறகு மேற்கண்ட வழிபாட்டு முறைகள் தொடங்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை முதலே பழனி கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் வருகை தந்தனர். நேற்று கிருத்திகை உற்சவத்தையொட்டி மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் உலா வந்தார். அதனை தொடர்ந்து 7 மணிக்கு தங்கரதத்தில் எழுந்தருளினார்.