பெண் பத்திரிகையாளரை கொலை செய்து குற்றவாளிகள் ஜாமீனில் வந்த குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு..!

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த 2 குற்றவாளிகளுக்கு இந்து அமைப்பினர் மாலை அணிவித்து வரவேற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி அவரது வீட்டிற்கு வெளியே வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தேசியளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களில் 12 பேர் ஏற்கனவே ஜாமீனில் வெளிவந்தனர். தற்போது மேலும் இருவர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் ஆகிய இருவருக்கும் கடந்த 9-ஆம் தேதி ஜாமீன் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 11-ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

விஜயபுராவில் அமைந்துள்ள காளிகாதேவி கோவிலுக்கு சென்று அவர்கள் இருவரும் வழிபாடு செய்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இந்து அமைப்பு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்துத்துவ அமைப்பை சேர்ந்த உமேஷ் வன்டால், குற்றவாளிகள் இருவருக்கும் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அப்போது அங்கிருந்த இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாரத் மாதா கி ஜே என்றும், சனாதன தர்மத்துக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.