கே.பி.முனுசாமி: ஆளுநர் ஆர்.என்.ரவி ஏதோ ஒரு காழ்ப்புணர்வில் பேசிக் கொண்டிருக்கிறார்..!

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் தரம் பற்றியும், பள்ளிக் கல்வி பற்றியும் தமிழக ஆளுநர் ரவி விமர்சித்துப் பேசியதற்கு திமுக கடும் எதிர்வினை ஆற்றி வரும் சூழலில், திமுகவோடு கைகோர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆளுநர் காழ்ப்புணர்வோடு பேசுவதாக விமர்சித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக இருப்பதாக அண்மையில் விமர்சித்திருந்தார். அதற்கு திமுக தரப்பில் கடுமையாக எதிர்வினைகள் எழுந்தன. உலகின் தலைசிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படித்தவர்கள்தான். மாணவர்களை சுயமாக சிந்திக்கத் தூண்டும் கல்விமுறை தான் சிறந்த கல்விமுறை. இதைப் பிடிக்காத சில வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள்தான் இன்று தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை குறை சொல்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார்.

எனினும், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 -ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்விலும் தமிழக பள்ளிக் கல்வி பற்றி விமர்சித்துப் பேசினார் ஆளுநர் ரவி. அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் 9 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75% மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40% மாணவர்களால் அவர்களது பாடப்புத்தகங்களைக் கூட படிக்க முடியவில்லை என ஒரு ஆய்வு கூறுகிறது எனப் பேசினார் ஆளுநர் ரவி. ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுக தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

ஆளுநர் ரவி ஆவணங்களைப் பரிசீலிக்காமல் அரசியல் உள்நோக்கத்தோடு அவ்வப்போது கொடுக்கும் கோமாளித்தனமான வாக்குமூலங்களை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிமுக தரப்பும் ஆளுநர் ரவியை காட்டமாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பான கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பதில் அளிக்கையில், “ஆளுநர் ஆர்.என்.ரவி ஏதோ ஒரு காழ்ப்புணர்வில் தான் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மிக உயர்வான இடத்தில் இருக்கிறது. ஒருசில பள்ளிகளில் மாணவர்கள் படிக்காததன் காரணம் அங்குள்ள ஆசிரியர்களின் நடவடிக்கை தான். அப்படியானவற்றை வைத்து ஒட்டுமொத்தமாக தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை குறைத்துப் பேசுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.