இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்ட மத்திய அரசு..!

இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இலங்கையில் விவசாயம் சார்ந்த தொழில்கள், காபி மற்றும் ரப்பர் தோட்ட வேலைகளுக்காக தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்களை ஆங்கிலேயே அரசு இலங்கைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியது. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் இலங்கையில் ஏராளமான வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொண்டனர் என்பது நாடறிந்த விஷயமாகும்.

இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் பெற்ற பிறகு குடியுரிமை சிக்கல் எழுந்ததால் இரு நாடுகளும் உடன்படிக்கை செய்து கொண்டது. அதன் பெயரில் பல்லாயிரக்கணக்கானோரை இந்தியா திரும்ப அழைத்துக்கொண்ட நிலையில் மலையகத் தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. மேலும் ஆங்கிலேயர்களால் இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையக தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்ததனை நினைவு கூரும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் விழா நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இலங்கையில் மலையக தமிழர்களின் 200-வது ஆண்டை குறிக்கும் வகையில் மத்திய அரசு இன்று தபால் தலை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டமான், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.